பாங்காக் : பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 41-வயதான மலேசியர் ஒருவர் போதைப் பொருள் கடத்தலுக்காக தாய்லாந்து நாட்டில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் லாவோசில் கடந்த டிசம்பர் 29-இல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து-லாவோஸ் இடையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு போதைப் பொருள் துடைத் தொழிப்பு நடவடிக்கை காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்து நாட்டின் பெண்மணி ஒருவரை அவர் மணந்துள்ளார். அவர் தாய்லாந்து நாட்டில் தனது குற்றங்களுக்கான வழக்கை எதிர்நோக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் ஏற்கனவே மலேசியக் காவல் துறையால் கைது செய்யப்பட்டவராவார். அப்போது அவரிடம் இருந்து 190 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட சொத்துகள் இருந்ததாக புக்கிட் அமான் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்த சொத்துகளில் சில கைப்பற்றப்பட்டதாகவும் சில அவரிடமே திரும்பவும் ஒப்படைக்கப்பட்டதாகவும் புக்கிட் அமான் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர் மலேசிய போதைப் பொருள் கும்பல்களுடன் தொடர்பு கொண்டவராகவும் கருதப்படுகிறார்.