Home உலகம் நிலநடுக்கம்: பாங்காக் மலேசியத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

நிலநடுக்கம்: பாங்காக் மலேசியத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

99
0
SHARE
Ad
நிலநடுக்கத்தால் தாய்லாந்தில் பாதிக்கப்பட்ட புத்த ஆலயம் ஒன்று

பாங்காக்: மியான்மாரிலும் தாய்லாந்திலும் நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 28)  ஏற்பட்ட வலுவான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, பாங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தாய்லாந்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அதிகாரிகள் மலேசியத் தூதரகக் கட்டடத்திற்கான பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

ஓர் அறிக்கையில், மலேசிய வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) மலேசியர்கள் குரோனோஸ் அலுவலக கோபுரத்தில் அமைந்துள்ள தூதரகத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கு பதிலாக, நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டால், அவர்கள் சாத்தோர்ன் கார்டனுக்கு அருகிலுள்ள தூதரக வளாகத்தில் கூட வேண்டும்.

#TamilSchoolmychoice

நேற்று மியான்மாரைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், வடமேற்கு மியான்மாரில் உள்ள சாகைங் பகுதியில் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணியளவில் தாக்கியது, அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

பினாங்கு உட்பட பல இடங்களில் நிலநடுக்கங்களின் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுவரையில் மியன்மாரில் 150-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். எனினும் இந்த மரண எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

மியான்மார்- தாய்லாந்தில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.

யாங்கோன் மற்றும் பாங்காக்கில் உள்ள அதன் தூதரகங்கள் மூலம், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியது.

மியான்மாரில், சாகைங், மண்டலே, மாக்வே மற்றும் பாகோ பகுதிகளிலும், கிழக்கு ஷான் மாநிலம் மற்றும் தலைநகர் நேய்பிடாவிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில், உள்கட்டமைப்பு பாதுகாப்பை அதிகாரிகள் மதிப்பீடு செய்ததால், பாங்காக்கில் உள்ள விமான நிலைய ரயில் இணைப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தாய் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பாங்காக்கில் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்த மலேசியர்களும் காயமடையவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மார், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்க பேரிடர்களைத் தொடர்ந்து னிதாபிமான முயற்சிகளுக்கு உதவ மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

ஒரு சமூக ஊடக அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேசியாவின் ஆதரவை வழங்க அவர் உறுதியளித்தார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.