
கோலாலம்பூர்: இந்து சமயத்திற்கு எதிராகவும், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடம் மாற்றப்படுவது குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாம்ரி வினோத் எப்போது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவை காவல் துறையினர் பெற்றாலும் சில மணி நேரங்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது நோன்பு மாதம் என்பதாலும், ஹரிராயா பெருநாள் நெருங்கி வருவதாலும் அவர் மீதான நீதிமன்ற நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் உலவுகின்றன.
போர்ட்டிக்சன் பெர்சாத்து கட்சி தொகுதி தலைவர், செகுபார்ட் என்று அழைக்கப்படும், பாட்ருல் ஹிஷாம் ஷாஹாரின், சர்ச்சைக்குரிய சாம்ரி வினோத் நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொழுகைக்கு முன்பாக காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அவருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்ற சில மணி நேரங்களுக்குப் பின்னர் சாம்ரி, “அதிகரித்த பொதுமக்களின் அழுத்தத்தால்” விடுவிக்கப்பட்டதாக செகுபார்ட் கூறியிருக்கிறார்.
சாம்ரி வினோத்துக்கு இலவசமாக வழக்காட 13 வழக்கறிஞர்கள் அவருக்கு ஆதரவாகத் திரண்டனர் என்ற தகவலும் வெளியிடப்பட்டது.
நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவுக்கான காவல்துறையின் விண்ணப்பத்தின் போது ஒன்பது இலவச வழக்கறிஞர்கள் அவருடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சாம்ரி (வயது 41) நேற்று மார்ச் 28, பெர்லிஸின் தலைநகர் கங்காரில் கைது செய்யப்பட்டு, 1948-ஆம் ஆண்டின் தேசத்துரோக சட்டத்தின் பிரிவு 4(1) மற்றும் 1998-ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் பிரிவு 233-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
நேற்று காலை சுமார் 9.30 மணியளவில் கங்கார் கீழமை (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அனா ரோஜானா நோர் தடுப்புக் காவல் உத்தரவை வழங்கியதை காவல்துறை தலைவர் (ஐஜிபி) ரசாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள் மாலை 6.30 மணிக்கு ஒரு நபரிடமிருந்து புகார் அறிக்கையைப் பெற்றதாக ரசாருடின் கூறினார்.
சாம்ரி மீதான விசாரணைகள், கோலாலம்பூரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலை இடமாற்றம் செய்வது தொடர்பான அவரது முகநூல் பதிவுகளுடன் தொடர்புடையது. மதத்தை அவமதித்தல் மற்றும் பொது ஒழுங்கைக் குலைப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு உதவும் நோக்கத்தில் அவரது தடுப்புக் காவல் பெறப்பட்டது.
கோவிலை இடமாற்றுவது தொடர்பான பிரச்சினை முன்னதாக பொது விவாதத்தை ஏற்படுத்தியது. மத நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கை அச்சுறுத்தும் எந்தவொரு அறிக்கைகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஒரு பள்ளிவாசலுக்கு வழிவகுக்க தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலை இடம் மாற்றும் திட்டங்கள் பற்றிய செய்திகள் வெளியாகியபோது இந்த சர்ச்சை தொடங்கியது.
கோவிலின் நிர்வாகக் குழு, ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அருகாமையில் சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு மாற்றுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.