
கோலாலம்பூர்: இந்து சமயத்திற்கும், காவடி எடுப்பது குறித்தும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாம்ரி வினோத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்துகள் திடீரென நீக்கப்பட்டிருந்தன.
அவற்றை அவரே நீக்கினாரா என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுந்த மலேசிய தொடர்பு, பல்ஊடக ஆணையம் (MCMC) மார்ச் 5 அன்று சாம்ரி வினோத் அந்த முகநூல் பதிவை நீக்குமாறு மேட்டா (Meta) என்னும் பேஸ்புக் உரிமையாளரான நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த பதிவு தைப்பூசத்தின் போது காவடி எடுத்துச்செல்லும் பக்தர்களை, ஆவி பிடித்தவர்கள் என்றும் மதுவில் மயங்கியவர்கள் என்றும் விமர்சித்திருக்கிறது.
இதன் காரணமாகவே அந்தப் பதிவு நீக்கச் சொல்லி எம்சிஎம்சி கேட்டுக் கொண்டது.
அத்துடன், 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் (சிஎம்ஏ-CMA) பிரிவு 233ன் கீழ் குற்றச்செயலாக கருதப்படும் தன்மைகள் அந்தப் பதிவில் உள்ளதால், அந்த உள்ளடக்கத்தை நீக்குவதற்கான இறுதி முடிவு மேட்டா தளத்தையே சாரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உள்ளடக்கத்தை நீக்குவது குறித்த இறுதி முடிவை, தளம்தான் எடுக்கும். இது, வழங்கப்பட்ட காரணங்களை மதிப்பீடு செய்யும் மற்றும் தளத்தின் சமூக வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே அமையும்” என்றும் எம்சிஎம்சி தெரிவித்தது.
ஜனவரி 1 முதல் அமலில் உள்ள சமூக ஊடக உரிமங்கள் தொடர்பான விதிமுறைகளின்படி, பயனர் வரம்புகளை மீறும்போது சமூக ஊடக தளங்கள் – மேட்டாவும் உட்பட – சிஎம்ஏ சட்ட விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஆனால், மேட்டா மற்றும் அதன் தளங்கள் அரசாங்கத்திடம் இருந்து உரிமம் பெற்றுள்ளதா என்பது உறுதியாக இல்லை. ஜனவரி 17 அன்று, மேட்டா உரிமம் பெறும் இறுதி நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாம்ரியின் பதிவு, எரா எஃப்.எம் வானொலியின் மூன்று அறிவிப்பாளர்கள் தொடர்பான ஒரு சம்பவத்தை பற்றியதாகும். அந்த சம்பவத்தில், ஒருவர் நடனமாடியும், மற்றொருவர் “வேல் வேல்” என்று முழக்கமிட்டும் இருந்தனர். இது தைப்பூசத்தின் போது காவடி எடுத்துச் செல்லும் போது பக்தர்கள் முழங்கும் முழக்கமாகும்.
இதற்கிடையில் காவல் துறையும் சாம்ரி வினோத் மீதான விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது. “காவல்துறை, சாம்ரியின் பேஸ்புக் பதிவை உருவாக்க பயன்படுத்தப்பட்ட சாதனத்தை பறிமுதல் செய்துள்ளது, மேலும் விசாரணையை எளிதாக்க தொழில்நுட்ப உதவி வழங்கியுள்ளது” என்றும் எம்சிஎம்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.