
கோலாலம்பூர்: எரா எஃப் எம் வானொலி அறிவிப்பாளர்கள் சர்ச்சைகள் ஒருபுறத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்து சமயத்தைப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சாம்ரி வினோத்தை சொஸ்மா சட்டத்தில் கைது செய்யுங்கள் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறைகூவல் விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் பல மஇகா தொகுதி தலைவர்கள் காவல் நிலையங்களில் சாம்ரி வினோத்துக்கு எதிராக புகார்களைச் செய்தனர். மஇகா இளைஞர் பகுதியும் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்

அதே வேளையில் சாம்ரி வினோத்துக்கு எதிராக பொது விவாதத்திற்கும் சவால் விடுத்துள்ளார் சரவணன். எந்த இடம், நேரம் குறிப்பிடுங்கள் நான் இந்து சமயம் குறித்த உங்களின் தவறான கருத்துக்களுக்கு உங்களுக்கு உரிய விளக்கங்களைத் தருகிறேன் என சரவணன் தெரிவித்தார்.
சரவணன் வெளியிட்ட காணொலிக்கு பதிலளித்து காணொலி ஒன்றை சாம்ரி வினோத் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 7) வெளியிட்டுள்ளார்.
சரவணனின் சவாலை ஏற்பதாக சாம்ரி வினோத் தனது பதில் காணொலியில் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுபோன்ற மதம் சம்பந்தப்பட்ட பொது விவாதங்களுக்கு காவல் துறையினர் அனுமதிக்கமாட்டார்கள் எனக் கருதப்படுகிறது.