ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய வாக்களிப்பு ஏப்ரல் 22-இல் நடைபெறும்.
2022-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்னோ-தேசிய முன்னணி இங்கு வெற்றி பெற்றதால், மீண்டும் அந்தத் தொகுதி மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் மீண்டும் தேசிய முன்னணிக்கே ஒதுக்கப்படுகிறது.அம்னோ வேட்பாளரை இங்கு நிறுத்தி நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயாராகத் தொடங்கியுள்ளது.
அம்னோவை எதிர்த்து பாஸ் களமிறங்குகிறது. 2022 தேர்தலில் இங்கு பெர்சாத்து வேட்பாளர் போட்டியிட்டார். பெர்சாத்து தற்போது பாஸ் கட்சிக்கு இந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளது.
ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கான தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருண் “இந்தத் தொகுதியில் 31,897 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கு 2.5 மில்லியன் ரிங்கிட் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது” என நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 7) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
டத்தோஶ்ரீ சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஆயர் கூனிங். மற்றொரு தொகுதி சென்டரியாங். 59 வயதான ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 22-ஆம் தேதி பினாங்கில் காற்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்று விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார்.
தாப்பா தொகுதி அம்னோ தலைவருமான இஷாம், 2022-இல் நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில் 2,213 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் 9,088 வாக்குகள் பெற்றார் இஷாம் ஷாருடின். அவரை எதிர்த்து நின்ற பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் மேஜர் டாக்டர் முகமட் நஸ்ரி ஹாஷிம் 6,875 வாக்குகள் பெற்றார். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் உஸ்தாஸ் பாரிட் 6,812 வாக்குகள் பெற்றார்.
2022 பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய 3 கூட்டணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து களம் கண்டன. தற்போது பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணி கூட்டணிகள் ஒன்றாக இணைந்து மடானி–ஒற்றுமை அரசாங்கத்தை நடத்தி வருவதால் ஆயர் கூனிங் தொகுதியில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளரை நிறுத்தாமல் தேசிய முன்னணிக்கே ஆதரவு தரும்.
ஏப்ரல் 26-இல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் 19 வாக்களிப்பு மையங்களும் அவற்றில் 63 வாக்களிப்பு முகப்பிடங்களும் செயல்படும்.
இடைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் எதிர்வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வரும். வெளிநாட்டு வாக்காளர்கள், மற்ற ஊர்களில் இருக்கும் வாக்காளர்களுக்கான இயங்கலை வழியான வாக்களிப்புக்கான பதிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும்.