Home நாடு ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் : தயாராகும் தேசிய முன்னணி!

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் : தயாராகும் தேசிய முன்னணி!

60
0
SHARE
Ad
காலமான ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின்

ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயாராகத் தொடங்கியுள்ளது.

டத்தோஶ்ரீ சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஆயர் கூனிங். மற்றொரு தொகுதி சென்டரியாங். 59 வயதான ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 22-ஆம் தேதி பினாங்கில் காற்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்றபோது மாரடைப்பால் காலமானார்.

மார்ச் 1 முதல் ரமடான் நோன்பு மாதம் தொடங்கவிருப்பதைத் தொடர்ந்து இடைத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிக்கும்போது அதனைக் கவனத்தில் கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி கோரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேதி குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் விவாதிக்குமாறு பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சரானி முகமட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சாஹிட் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மரணத்தால் அந்தத் தொகுதி காலியானதாக பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய சட்ட விதிகள் தெரிவிக்கின்றன.

ஆயர் கூனிங் தொகுதியில் மீண்டும் அம்னோ தனது வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022 பொதுத் தேர்தலில் ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் 9,088 வாக்குகள் பெற்ற இஷாம் ஷாருடின்  2,213 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் மேஜர் டாக்டர் முகமட் நஸ்ரி ஹாஷிம் 6,875 வாக்குகள் பெற்றார். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் உஸ்தாஸ் பாரிட் 6,812 வாக்குகள் பெற்றார்.

2022 பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய 3 கூட்டணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து களம் கண்டன. தற்போது பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணி கூட்டணிகள் ஒன்றாக இணைந்து மடானி–ஒற்றுமை அரசாங்கத்தை நடத்தி வருவதால் ஆயர் கூனிங் தொகுதியில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளரை நிறுத்தாமல் தேசிய முன்னணிக்கே ஆதரவு தரும்.