
கோலாலம்பூர் : எதிர்மறையான செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்காக மலேசியாகினி பத்திரிகையாளர் பி.நந்தகுமார் 20 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அண்மையில் அவரைக் கைது செய்தது. 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் 10 ஆயிரம் ரிங்கிட் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
சம்பந்தப்பட்ட முகவருக்கு எதிராக நந்தகுமார் தற்போது காவல் துறை புகார் ஒன்றை செய்துள்ளார். அந்நியத் தொழிலாளர்களுக்கான முகவரான அந்த பாகிஸ்தானிய நபர் தனக்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்ததாக அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தான் உண்மையானவன் என்பதை வலியுறுத்தியுள்ள நந்தகுமார், காவல் துறையினர் சம்பந்தப்பட்ட முகவரை விசாரிக்க வேண்டும் எனவும் காரணம் அவர் மனிதக் கடத்தல் குற்றத்திற்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது புகாரை நந்தகுமார் இன்று சனிக்கிழமை (மார்ச் 8) காவல் துறையில் பதிவு செய்தார்.