
கோலாலம்பூர்: எதிர்வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜசெகவின் கட்சித் தேர்தல் இதுவரை அந்தக் கட்சி கண்டிராத பல்வேறு திருப்பங்களையும் அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜசெக வரலாற்றில் தேசிய நிலையிலான மத்திய செயலவைக்கான தேர்தல் என்பது பல்லாண்டுகளாக லிம் கிட் சியாங் – கர்ப்பால் சிங் – ஆகியோரை மையப்படுத்திய தேர்தலாகவே இருந்து வந்தது. அவர்கள் இருவரும் தேசிய நிலையிலான கட்சித் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் – அவர்கள் கைகாட்டும் அவர்களின் ஆதரவாளர்களும் பெரும்பான்மை மத்திய செயலவை இடங்களைக் கைப்பற்றுவார்கள் என்பதுதான் ஜசெகவின் எழுதப்படாத பொது விதி!

கர்ப்பால் சிங்கின் மறைவு – லிம் கிட் சியாங்கின் அரசியல் ஓய்வு – இரண்டு சம்பவங்களும் ஜசெகவின் களத்தை முற்றாக மாற்றியமைத்துவிட்டன. அதிலும் 2018 முதல் அரசாங்கத்திலும் ஜசெக ஓர் அங்கமாக இடம் பெற்று வந்ததைத் தொடர்ந்து அரசாங்கப் பதவிகள் காரணமாக அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களின் அரசியல் கண்ணோட்டங்களும் திசை மாறத் தொடங்கின.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மார்ச் 16 கட்சித் தேர்தல்
எதிர்வரும் மார்ச் 16 தேசியப் பேரவையில் சுமார் 60 விழுக்காட்டுப் பேராளர்கள் அதாவது 2,500 பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓர் ஒப்பீடாக, 2022 தேசிய அளவிலான மத்திய செயலவை தேர்தலுக்காக 52 விழுக்காட்டு பேராளர்கள் – அதாவது 2,178 பேராளர்கள் குவிந்தனர்.
இந்த ஆண்டுக்கான தேர்தலில் 30 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் மொத்தம் 70 வேட்பளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் 15 பேர் பெண்கள்! எஞ்சிய 55 பேர் ஆண்கள்! 30 இடங்களில் 9 இடங்கள் மகளிருக்காக கட்டாயமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, எஞ்சிய 21 இடங்களுக்காக 55 ஆண்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஆனால், இந்தத் தேர்தல் பிரச்சாரங்கள் முழுக்க, முழுக்க ஒரே ஒரு பிரமுகரைச் சுற்றித்தான் சுழன்று கொண்டிருக்கிறன! அவர்தான் லிம் குவான் எங்!
குவான் எங்கை மையப்படுத்திய தேர்தல்

ஜசெகவைப் பொறுத்தவரை லிம் கிட் சியாங்கின் தியாகங்களை அந்தக் கட்சியினரோ, மற்ற மலேசியர்களோ எளிதில் மறந்து, கடந்து சென்றுவிட முடியாது. 2008-இல் பினாங்கு மாநிலத்தை ஜசெக கைப்பற்றியபோது, முதலமைச்சராக வாய்ப்பு இருந்தும் அந்தப் பதவியில் மகன் லிம் குவான் எங்கை அமர வைத்து அழகு பார்த்தார் கிட் சியாங்.
2018-இல் மகாதீர் தலைமையில் ஜசெக, மத்திய அரசாங்கத்தில் இடம் பெற்றபோது, மிக சுலபமாக கிட் சியாங் ஓர் அமைச்சராக முடி சூடிக் கொண்டிருக்க முடியும். ஆனால், அமைச்சுப் பொறுப்புகளை சக கட்சியினருக்கு வழங்கி அழகு பார்த்தார் கிட் சியாங். லிம் குவான் எங் நிதியமைச்சரானார்.

அவர்களின் சேவைகள், தியாகங்களுக்காக கிட் சியாங் சார்பிலோ, கர்ப்பால் சிங் சார்பிலோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கட்சியிலோ, அரசாங்கத்திலோ முக்கியப் பொறுப்பு வகிப்பதை யாரும் குறை சொல்வதில்லை.
ஆனால், கட்சியிலும், அரசாங்கத்திலும் கிட் சியாங், கர்ப்பால் சிங் ஆகிய இரு குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிக அளவில் பரவியிருப்பதை எதிர்க்கும் – தவிர்க்கும் – இளம் உறுப்பினர்களும், வாய்ப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட கட்சியின் நீண்ட கால உறுப்பினர்களும் – இணைந்து கொண்டு வர நினைக்கும் மாற்றங்கள்தான் – மார்ச் 16 கட்சித் தேர்தலில் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக, லிம் குவான் எங்கின் தங்கை லிம் ஹூய் யிங் பினாங்கு மாநில முதலமைச்சராக வர முயற்சிகள் செய்கிறார் என்பது கட்சியினரிடையே சலசலப்பையும் – ஏன் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. லிம் ஹூய் யிங் எதிர்வரும் கட்சியின் மத்திய செயலவைக்கான தேர்தலிலும் ஒரு வேட்பாளராகக் களம் குதித்திருக்கிறார். தற்போது பினாங்கு நாடாளுமன்ற உறுப்பினராகவும் துணை நிதியமைச்சராகவும் லிம் ஹூய் யிங் பதவி வகிக்கிறார்.
பினாங்கில் கர்ப்பாலின் ஒரு புதல்வர் (ஜக்டிப் சிங் டியோ) துணை முதல்வர், சட்டமன்ற உறுப்பினர், மற்றொரு புதல்வர் (கோபிந்த் சிங்) மத்திய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர், மூன்றாவது புதல்வர் (ராம் கர்ப்பால் சிங்) நாடாளுமன்ற உறுப்பினர் என்பது போன்ற சூழல்தான் அதிருப்தி அலைகள் கட்சியில் பரவுவதற்கான காரணங்கள் எனக் கூறப்படுகிறது!
சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தலில் கோபிந்த் சிங் தோல்வியடைந்ததற்கும் அதுவே காரணமாகக் கூறப்படுகிறது.
எனவேதான், தற்போது ஜசெக கட்சித் தலைவராக இருக்கும் லிம் குவான் எங்கைத் தோற்கடிப்பதற்கு பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என ஊடகத் தகவல்கள், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிட் சியாங் குடும்பத்தினரின் வாரிசு அரசியலை முறியடிக்கும் முயற்சிகள்தான் இந்தத் தேர்தல் என்பதுதான் வெளிவந்து கொண்டிருக்கும் அரசியல் ஆரூடங்கள்!
எனவே, குவாங் எங் 30 மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவராக வெற்றி பெறுவாரா, அல்லது வரலாற்றுபூர்வ தோல்வி காண்பாரா? என்ற கேள்விகள் பரபரப்புடன் அரசியல் பார்வையாளர்களிடையே விவாதிக்கப்படுகின்றன.
கிட் சியாங் – குவான் எங் – கடந்த கால சேவைகளைக் கருத்தில் கொண்டு இறுதி நேரத்தில் குவான் எங் மீதானா அனுதாப அலைகள் பெருகும், எப்படியும் மத்திய செயலவைக்கான தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற கணிப்புகளும் அதிகரித்து வருகின்றன.