Home Photo News ஜசெக தேர்தலில் புதிய தலைமைத்துவ இந்திய வேட்பாளர்கள்! மலாய் வேட்பாளர்கள்!

ஜசெக தேர்தலில் புதிய தலைமைத்துவ இந்திய வேட்பாளர்கள்! மலாய் வேட்பாளர்கள்!

61
0
SHARE
Ad
ஜசெக தேர்தலில் வெற்றி பெற்ற அருள்குமார் ஜம்புநாதன்

ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக தேர்தலில் சில இந்திய வேட்பாளர்களோடு மலாய் வேட்பாளர்களும் வெற்றி வாகை சூடி, ஜசெக ஒரு பல இனக் கட்சி என்பதை மீண்டும் நிரூபித்தனர்.

மலாய் வேட்பாளர்களில் பாங்கி நாடாளுமன்று உறுப்பினர் ஷாரெட்சான் ஜோஹான் 20-வது இடத்திலும், பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யாங் சைபுரா ஓத்மான் 21-வது இடத்திலும் வெற்றி பெற்றனர்.

இந்திய வேட்பாளர்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை சீன உறுப்பினர்களைக் கொண்ட ஜசெக கட்சியில் சீக்கிய இந்தியரான கோபிந்த் சிங் டியோ அதிக வாக்குகளில் முதலாவதாக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் கட்சியின் தேசியத் தலைவராக மத்திய செயலவையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

கோபிந்த் சிங்கின் சகோதரர் ராம் கர்ப்பால் சிங்கும் 30 மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய உறுப்பினர்கள் பலர் களமிறங்கினாலும் கோபிந்த்-ராம் கர்ப்பால் இருவரைத் தவிர மேலும் இரண்டு இந்திய வேட்பாளர்கள் மட்டுமே மத்திய செயலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன், கஸ்தூரி ராணி பட்டு ஆகியோரே அந்த இருவர்.

ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக்குக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர் அருள்குமார். மத்திய செயலவை உறுப்பினராக வெற்றி பெற்ற அவர் 5 உதவித் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

அருள்குமார்-வீரப்பன்

அருள்குமாருடன் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருந்து போட்டியிட்ட சட்டமன்ற – ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் தோல்வியடைந்திருக்கிறார்.

கஸ்தூரி கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டாலும், மார்ச் 16 ஜசெக தேர்தலில் போட்டியிட முன்வந்தார். வெற்றியும் பெற்றிருக்கிறார். அவரின் மறைந்த தந்தை பி.பட்டு ஜசெகவில் கொண்டிருந்த செல்வாக்கு கஸ்தூரிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கலாம்.

பத்து கவான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு

பட்டுவின் நினைவாக, அவரின் கடந்த கால சேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவரின் பெயரால் ஏழை மாணவர்களுக்கான கல்வி நிதி ஒன்றை ஜசெக உருவாக்கும் என ஜசெக பேராளர் மாநாட்டில் கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்திருந்தார்.

24-வது இடத்தில் வெற்றி பெற்ற அருள்குமார் 1,747 வாக்குகள் பெற்றார். 25 இடத்தைக் கைப்பற்றிய கஸ்தூரி பட்டுவுக்கு 1,722 வாக்குகள் கிடைத்தன. 30 பேர் கொண்ட மத்திய செயலவைக்கு கட்டாயமாக 9 பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஜசெகவின் அமைப்பு சட்டவிதியும் கஸ்தூரிக்கு சாதகமாக அமைந்திருக்கலாம்.

கணபதி ராவ்

முன்னாள் அமைச்சர் வ.சிவகுமார், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் ஆகியோர் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தனர். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் தோல்வியடைந்து ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் – ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருக்கும் அருள்குமார் வெற்றி பெற்றிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தோணி லோக்கின் செல்வாக்கினால்தான்-ஆதரவால்தான் அருள்குமார் வெற்றி வாகை சூடியிருக்கிறார் என்பதும் ஓரளவுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் வலிமையும், செல்வாக்கும் மிக்க ஒரு புதிய இளம், இந்திய தலைமைத்துவம் அடுத்த கட்டமாக ஜசெகவில் உருவாகவில்லை என்பது ஏமாற்றமே!

-இரா.முத்தரசன்