

‘உரு’ முதல் நூலை சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ வி.எல்.காந்தன் அவர்களிடம் முத்து நெடுமாறன் வழங்கினார். இரண்டாவது நூலை, தனது முரசு அஞ்சல் தமிழ் மென்பொருளையும், எழுத்துருக்களையும் முதன் முதலில் பயன்படுத்திய பத்திரிகை ‘மயில்’ என்ற முறையில் அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியரும், உமா பதிப்பகத்தின் தோற்றுநரும், மலேசியக் கல்வி அமைச்சில் உயர்பதவி வகித்தவருமான டத்தோ ஆ.சோதிநாதன் அவர்களுக்கு முத்து நெடுமாறன் வழங்கினார். சோதிநாதன் சார்பில் அவரின் மகன் சிவநாதன் முத்து நெடுமாறனிடமிருந்து இரண்டாவது நூலைப் பெற்றுக் கொண்டார்.


பி.எம்.மூர்த்தி உரை
‘உரு’ நூல் வெளியீட்டு விழாவில் கல்வி அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரி பி.எம்.மூர்த்தி அவர்களும், பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் அவர்களும் உரையாற்றினர்.
முரசு அஞ்சல் மென்பொருளின் பயனர் என்ற முறையிலும், அதனைப் பள்ளிகளில் பயன்படுத்துவதில் நீண்ட காலமாகத் தொடர்புடையவன் என்ற வகையிலும் பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு தோட்டப்புறப் பள்ளியில் ஆசிரியராகத் தான் பணியாற்றிய காலங்களில் முத்து நெடுமாறனைத் தொடர்பு கொண்டு முரசு அஞ்சல் மென்பொருளை வாங்கியதையும் அதனைத் தோட்டப்புறப் பள்ளியொன்றில் முதன்முறையாகப் பயன்படுத்திய வேளையில் ஏற்பட்ட சிக்கல்கலையும், அந்தத் தோட்டப்புறத் தமிழ்ப் பள்ளியில் கணினியையும் தமிழ் மென்பொருளையும் பயன்படுத்த, ஆதரவை வழங்கிய அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரையும் சுவையான சம்பவங்களுடன் விவரித்து மூர்த்தி உரையாற்றினார்.


தான் அன்று சில மாணவர்களுக்கு கணினியில் ஏற்படுத்திய ஆர்வத்தைத் தொடர்ந்து இன்று அவர்கள் அந்தத் துறையில் கல்வி கற்று பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகள் வகிப்பதையும் நன்றியுடன் மூர்த்தி நினைவுகூர்ந்தார்.
வெறும் மேடை உரையாக மட்டுமல்லாமல் தான் குறிப்பிட்ட கடந்த கால சம்பவங்களின் முக்கிய புகைப்படங்களையும் தரவுகளையும் திரையில் காட்டி அவர் உரையாற்றியது பங்கேற்பாளர்களிடையே பலத்த கரவொலிகளை எழச் செய்தது.
டத்தோ என்.எஸ்.இராஜேந்திரனின் உரை


நூல் குறித்து உரையாற்றிய பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் தான் படித்து முடித்த அந்த நூலின் சுவாரசியமான அம்சங்களையும், முத்து நெடுமாறனின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களையும், அந்த நூலை வாசித்ததன் மூலம் பெற்ற அனுபவங்களையும் விவரித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, உரையாற்றிய நூலாசிரியர் கோகிலா, முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கட்டுரைத் தொடராக எழுதும், வாய்ப்பைத் தனக்கு வழங்கிய மெட்ராஸ் பேப்பர் இணைய ஊடகத்தின் ஆசிரியர் பா.ராகவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். முதலில் முத்து நெடுமாறனுடன் ஒரு நேர்காணலாகத் தொடங்கிய தனது தொழில் முறை பத்திரிக்கையாளர் சந்திப்பு, பின்னர் கட்டுரைத் தொடராகவும், இன்று நூலாகவும் விரிவடைந்துள்ளது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக கோகிலா குறிப்பிட்டார்.


இந்தக் கட்டுரைத் தொடரை தான் எழுதுவதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியதோடு அதன் உள்ளடக்கங்களில் திருத்தங்கள் செய்து இந்த நூல் சிறப்புற உருவாக, ஆதரவு தந்த முத்து நெடுமாறனுக்கு கோகிலா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் முத்து நெடுமாறன் ஆற்றி வரும் கணினித் தமிழ் மீதான பங்களிப்புகளுக்காக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மன்னர் மன்னர் முத்து நெடுமாறனுக்கு சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.


167 பக்கங்களுடன் வெளிவந்திருக்கும் ‘உரு’ நூல் தமிழ்நாட்டிலுள்ள காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்து ஜூலை 5-ஆம் நாள் சிங்கப்பூரிலும், ஜூலை 12-ஆம் நாள் சென்னையிலும் இந்த நூலின் வெளியீட்டு விழா நடைபெறும்.