Home நாடு முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொடர் ‘உரு’ – பரவலான வரவேற்பு

முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொடர் ‘உரு’ – பரவலான வரவேற்பு

409
0
SHARE
Ad

சென்னையைத் தளமாகக் கொண்டு, இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான ‘மெட்ராஸ் பேப்பர்’, தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை,  ஒரு தொடராக கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் வெளியிட்டு வருகிறது.

‘மெட்ராஸ் பேப்பர்’ ஊடகத்தின் 100-வது இதழாக மலரும் பதிப்பில் இந்த வரலாற்றுத் தொடர் தொடங்கியது.

அந்தக் கட்டுரைத் தொடருக்கு வாசகர்களிடம் இருந்து பரலான வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை மெட்ராஸ் பேப்பர் ஊடகத்தின் வாசகர்களின் பதிவுகள் மூலமும், சமூக ஊடகங்களின் பதிவுகள் மூலமும் தெரிந்து கொள்ள முடிகிறது.

முதல் அத்தியாயத்தில்…

#TamilSchoolmychoice

முத்து நெடுமாறன் அவர்கள் கணினி துறையில் சாதித்திருக்கும் சாதனைகள் பணிகள் குறித்தும் இதன் தொடர்பில் அவரின் வாழ்க்கைப் பாதையில் நடந்த முக்கிய சம்பவங்களையும் விவரிக்கும் ‘உரு’ என்ற தலைப்பு கொண்ட அந்தத் தொடரை ‘மெட்ராஸ் பேப்பர்’ ஊடகத்தின் ஊடகவியலாளர்களில் ஒருவரான கோகிலா எழுதி வருகிறார். முத்து நெடுமாறனுடன் நேரடியாகப் பல நேர்காணல்களை நடத்தி அதன் மூலம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் அந்தத் தொடர் கட்டுரையை கோகிலா எழுதி வருகிறார்.

இந்த தொடரின் முதல் கட்டுரையில் சிலாங்கூர் மாநிலத்தின் கேரித்தீவு என்ற பகுதிக்கு முத்து நடுமாறனின் மூதாதையர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்து சேர்ந்த விவரங்களும், முத்து நெடுமாறனின் ஆரம்பப் பள்ளி வாழ்க்கை சம்பவங்களும்  விவரிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பப் பள்ளி படிக்கும் போது தனது சக மாணவி ஒருவர் தனது தங்கையின் பெயரை எழுதி தன் சட்டையில் ஒட்டி விட்டதும் அதை வீட்டுக்கு சென்றபின்தான் முத்து நெடுமாறனின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர் என்பதும் அவரின் ஆரம்பப் பள்ளி சம்பவங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கிறது

முத்து நெடுமாறனின் பூர்வீகம் குறித்த சில சுவாரசிய தகவல்களையும் முதல் கட்டுரை கொண்டிருக்கிறது. அவரின் பூர்வீகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற ஊராகும். அவரது தாத்தா சுப்புராயன் தமிழகத்திலிருந்து மலாயாவுக்கு வந்து கேரித் தீவில் ஒரு கங்காணியாக பணி புரிந்திருக்கிறார்.

அப்போது இருந்த சூழ்நிலையில்  அந்த தீவில் உள்ள ஆண் மகன்களுக்கு 12 வயது ஆகிவிட்டால் அவர்கள் வெள்ளையரின் கீழ் தோட்டப்புற வேலைகளுக்கு பணியாற்ற அனுப்பப்பட வேண்டும். தோட்டத்து சூழ்நிலையை பார்த்த சுப்பராயன் இந்த நிலைமை தன் மகனுக்கு வரக்கூடாது என முடிவு செய்கிறார். அதைச் செயல்படுத்தும் விதத்தில் தன் மகனைப் பள்ளியில் படிக்க வைத்தார்.

அவரது மகனுக்கு 12 வயதானதும் அவரது சக வயதுடைய சிறுவர்கள் அந்தத் தோட்டத்தில் தோட்ட வேலைக்கு சென்ற வேளையில் சுப்புராயனின் மகனோ நான்காம் வகுப்பு படிக்க தொடர்ந்து பள்ளிக்கு சென்றார். சுப்புராயனின் அந்த மகன் தான் முரசு நெடுமாறன். பாப்பா பாவலர் என்று மலேசிய தமிழ் இலக்கிய உலகம் கொண்டாடிய கவிஞர். அவர்தான் முத்து நெடுமாறனின் தந்தை. இவ்வாறான சம்பவங்களை சுவைபட விவரிக்கிறது முத்து நெடுமாறன் குறித்த தொடரின் முதல் அத்தியாயம்.

-இரா.முத்தரசன்

‘மெட்ராஸ் பேப்பர் ‘ஊடகத்தின் இணையத் தொடர்பு :

https://www.madraspaper.com/

மெட்ராஸ் பேப்பர் ஊடகத்திற்கான சந்தா விவரங்கள்:

https://www.madraspaper.com/subscription/