
கணினித் தமிழை உயிராய்க்
கருதும் முத்து நெடுமாறன் !
உலகைத் தன்னுள் அடக்கியுள
ஒப்பருங் குறள் போல் இற்றையநாள்
உலகைக் கைக்குள் ஒடுக்கியுள
உயர்பொருள் கணினி எனச்சொல்வோம் !
உலகத் தாய்மொழி ஆங்கிலமும்
உருவாக் கிட்ட கணினியதும்
உலகை ஆளும் என்பதனால்
ஓங்கி நிற்கும் கணினிமொழி !

கணினி மொழியும் இறைவன்போல்
கண்ணால் காண முடிவதில்லை !
கணினி, காணா மொழியாலே
காட்டும் உலகின் பன்மொழியைத்
தனித்தனி யாகப் பிரித்(து) அதனால்
தனிப்பெருந் திறனைத் தன்னுள்ளே
கணினி வைத்தே இருக்கும்,அது
கடவுள் உலகுக் களித்தகொடை !
இறைவன் அளித்த அக்கொடையில்
இனிக்கும் தமிழை இணைத்துவிடும்
இறையின் அருளைப் பெற்றவராய்
எங்கட் குள்ளார் முத்தெழிலன் !
நிறைந்த குடமாய்த் தளும்பாமல்
நிறையத் தமிழ்க்கே செய்கின்றார் !
குறைந்த விலையில் கணினிவழி
கொடுக்கின் றாரே தமிழ்எழுத்து !
கேரித் தீவில் பிறந்தவராம்
கேளிர் முத்து நெடுமாறன் !
ஊறிக் கணினித் துறையினிலே
உலக அளவில் தமிழ்மொழியை
மாரி யைப்போல் பொழிந்துவரும்
மாபெரும் ஆற்றல் நிறைந்தவராம் !
கூரிய சிந்தனை கணினியிலே
கொண்டே தமிழை வளர்ப்பவராம் !
-பாதாசன்
அருஞ்சொல் விளக்கம் :-
கேளிர் – நண்பர்