
டெல்அவிவ் : மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்திய இஸ்ரேல்-ஹாமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவு கண்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை (மார்ச் 18) இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் காசாவில் ஹாமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
ஹாமாஸ் மீது மேலும் கூடுதலான இராணுவ வலிமையைப் பிரயோகிக்கப் போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (படம்) சூளுரைத்துள்ளார்.
இந்தத் தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்பாக அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்துடன் இஸ்ரேல் ஆலோசனை நடத்தியிருக்கிறது.
“ஹாமாஸ், மற்றும் ஹௌதி தீவிரவாதிகள் அனைவரும் தங்களின் பயங்கரவாதத்தால் இஸ்ரேலை மட்டும் பயமுறுத்தவில்லை. மாறாக அமெரிக்காவையும் அச்சுறுத்துகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் தகுந்த விலையைத் தந்தாக வேண்டும். மிகத் தீவிரமாக பதிலடிகள் தொடரும்” என வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு பேச்சாளர் கேரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.