கோலாலம்பூர் : நெடுங்காலமாக நிலப் பிரச்சனையை எதிர்நோக்கிய ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு நிரந்தத் தீர்வு கிட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த ஆலயம் தொடர்பாக தமது தரப்பு மேற்கொண்ட முயற்சிக்கு, இது சுமூகமான தீர்வு என தாம் கருதுவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) கோலாலம்பூர் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ இரவு 8.30 மணியளவில் நேரடியாக வருகையளித்தார். அவருடன் பிரதமர் துறை துணையமைச்சர் எம்.குலசேகரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோரும் வருகை தந்தனர்.
இந்தக் கோவிலுக்கு அரசாங்கம் வழங்கிய நிலத்தை உறுதிப்படுத்தும் கடிதம் வழங்கப்பட்டதை அடுத்து, சிறப்புப் பூஜையில் கலந்து கொண்டு, பின்னர் ஊடகவியலாளர்களோடு சிறப்புச் சந்திப்பையும் கோபிந்த் சிங் நடத்தினார்.
கடந்த ஒரு மாத காலகட்டத்தில் தேவி ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய விவகாரம் தொடர்பாக பல அவசர கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், இந்தக் கோவிலுக்கு தாம் இருமுறை வருகை தந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கோவில் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்பது பல பக்தர்களின் எதிர்ப்பார்ப்பானாலும், மாற்று நிலம் 100 மீட்டருக்கும் குறைவான இடத்திலேயே, அதே பாதையிலேயே அமைந்திருக்கிறது.
இந்தக் கோவிலுக்கான நிரந்தரத் தீர்வை எட்ட, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ டாக்டர் சலிஹா முஸ்தபா, உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன், இதர அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோவில் நிர்வாகம், மலேசிய இந்து சங்கம், அரச மலேசிய போலீஸ் அதிகாரிகள், வட்டார பக்தர்கள், கோலாலம்பூர் மாநகர மன்றம் என பல தரப்பிடம் பல முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர் ஆலய நிர்வாகத்தினர், தங்களுக்கு முன்வைக்கப்பட்டத் தீர்வையொட்டி, அவர்களது தனிப்பட்ட வழக்கறிஞர்களோடு கலந்தாலோசனை நடத்த அவகாசம் தேவைப்பட்டதையும் அமைச்சர் பதிவு செய்தார்.
இந்தச் சர்ச்சையைக் கேள்விப்பட்டவுடன், ஆலயத்துக்கு தாம் நேரில் சென்றதோடு, மூன்று மாற்று நிலங்களைத் தாம் பார்வையிட்டதாகவும், அதற்குப் பிறகு தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த நிலத்தை உறுதிபடுத்தியதாகவும் அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
ஆலய நிர்வாகத்தினரின் ஒப்புதலோடு இந்த நிலம் தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் அமைவதற்கான நிலப்பட்டாவோடு வழங்கப்பட்டுள்ளது.
பெரும் சவாலாக விளங்கிய இந்த ஆலயப் பிரச்சனைக்குத் தீர்வு காண தம்மோடு இணைந்து உழைத்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனுக்கும், டத்தோ பண்டார் மைமுனா முகமட் ஷரீப் அவர்களுக்கும், சட்ட ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் தற்கால நிலையைப் புரிந்து தம்மோடு இணைந்த பொது மக்களுக்கும் அமைச்சர் தனது நன்றியைப் பதிவு செய்தார்.
ஆலயம் என்பது இந்தியர்களின் வழிபாட்டுத் தலமாக மட்டும் அல்லாமல், சமூகத்தை ஒன்றிணைக்கும் மையமாகவும் செயல்படுகிறது. ஆக ஆலயங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என தாம் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.