Home நாடு கோபிந்த் சிங்: ‘எரிவாயு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலக்கவியல் அமைச்சு உதவும்’

கோபிந்த் சிங்: ‘எரிவாயு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலக்கவியல் அமைச்சு உதவும்’

89
0
SHARE
Ad

  • அயராது உதவும் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய நிர்வாகத்துக்குப் பாராட்டு

சுபாங் ஜெயா: புத்ரா ஹைட்சில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலக்கவியல் அமைச்சு நிச்சயம் உதவும் என உத்தரவாதம் அளித்துள்ளார் அமைச்சர் கோபிந் சிங்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) புத்ரா ஹைட்சில்அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக உதவி மையத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை இலக்கவியல் அமைச்சர் நேரடியாகச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

தமதமைச்சின் கீழ் 100 திறன்பேசிகள் (smart phone), 100 மடிக்கணினிகள்(laptop), 100 தட்டைகள் (tab),  500 மின்னூட்டி (power bank) என நுட்பவியல் தொடர்புப் பொருட்கள் வழங்கப்படுவதோடு, இதர உதவிகளும் நல்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் உறுதி கூறினார்.

தீச்சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரடியாகச் சென்று கண்ட பின், அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்க, கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதனின் அலுவலகத்தைப் பாதிக்கப்பட்ட மக்கள்  தொடர்பு கொள்ளலாம்.

தமதமைச்சோடு, இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இலக்கவியல் கூட்டுறவு கழகம், சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகம், தொழில்நுட்ப இலக்கவியல் பெருளாதார கூட்டுறவு கழகம் ஆகியன, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெளிவான தகவல்களையும், தேவையான தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவதை உறுதி செய்யும் எனவும் அமைச்சர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக விளங்கிய புத்ரா ஹைட்ஸ் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்துக்கு வருகையளித்து, அந்த ஆலய நிர்வாகம் அயராது  வழங்கும் உதவிகளுக்கும் சேவைகளுக்கும் கோபிந்த் சிங் நன்றி பாராட்டினார்.

நேரம் காலம் பாராமல், எந்த ஒரு பேதமும் இன்றி, மக்களின் நலனுக்காக உழைக்கும் சுகாதாரத்துறையினருக்கும், செம்பிறைச் சங்கத்தினருக்கும்,  தீயணைப்புத் துறையினருக்கும், மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும், இதர அரசு ஊழியர்களுக்கும் வட்டாரத் தலைவர்களுக்கும், மாந்த நேயம் காக்கப் போராடும் பொது மக்களுக்கும் தனது நன்றியினை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பதிவு செய்தார்.