
சுபாங் ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலையில் சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் போன்ற நடுநாயகமான நகர் பகுதியில் ஏற்பட்ட தீச்சம்பவம் சமூக – அரசாங்கத் தரப்புகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பயங்கரமான நிலநடுக்கம் போன்ற உணர்வை அந்த தீ சம்பவம் ஏற்படுத்தியதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
பல மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்புகள் வெடித்து வானில் உயர்ந்தன. அந்த காட்சியை சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்து கூட பார்க்க முடிந்தது.
தாமான் பூச்சோங் பெர்டானாவில் உள்ள ஒரு எரிவாயு குழாய் வெடித்ததில் தீ பரவியதாக காலை 8.23 மணியளிவில் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்பு இலாகா உறுதிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து சுற்றுவட்டாரங்களில் இருந்து தீயணைப்புப் படை வீரர்கள் வாகனங்களில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
தீ வேகமாகப் பரவத் தொடங்கியதை அடுத்து காலை 9.30 மணியளவில் அருகிலிருந்து இல்லங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீக்காயங்களுக்கு இலக்கான 25 பேருக்கு மருத்துவ முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 5 பேர் செர்டாங் மருத்துவமனைக்கு கூடுதல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
மீட்கப்பட்ட பலர் அருகிலிருந்து சுபாங் ஜெயா, ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் பலர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டதை அடுத்து செர்டாங், சைபர் ஜெயா, புத்ரா ஜெயா மருத்துவமனைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
11 மணியளவில் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் தற்காலிக நிவாரண முகாம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சுபாங், புத்ரா ஹைட்ஸ் பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டன. எனினும் காலை 11.30 மணிக்குள்ளாக மின்தடைகள் சரிசெய்யப்பட்டன.
சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவால் இந்த தீச்சம்பவம் ஏற்பட்டதாக தீயணைப்பு இலாகாவின் முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை 8.10 மணியளவில் மைய எரிவாயு குழாயில் தீ பிடித்ததாக பெட்ரோனாஸ் கேஸ் பெர்ஹாட் நிறுவனம் காலை 11.25 மணியளவில் அறிவித்தது.
மதியம் 12.15 மணியளவில் சுபாங் ஜெயா செக்ஷன் 19-இல் உள்ள பள்ளிவாசல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவதற்காக திறந்து விடப்பட்டது.
மதியம் 1.00 மணிக்குள்ளாக 78 தீயணைப்புப் படைவீரர்கள், 10 தீயணைப்பு வாகனங்கள், 22 சாதனங்கள், 4 அவசர மருத்துவ சிகிச்சை, மீட்புக் குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் குவிக்கப்பட்டனர்.
82 பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டதோடு, இதுவரையில் 12 பேர் தீயினால் காயமடைந்துள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
சுபாங் விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்தன.
பிற்பகல் 1.30 மணியளவில் 63 பேர் தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டது சைபர்ஜெயா, புத்ரா ஜெயா, செர்டாங் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
எரிவாயு கசிவு மேலும் தொடராமல் இருக்க மேற்கொண்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
பிற்பகலில் 112 பேர் பாதிக்கப்பட்டனர் 49 வீடுகள் பாதிக்கப்பட்டன என தீயணைப்பு இலாகா அறிவித்தது.
தீ பரவாமல் இருக்கவும், கட்டுப்படுத்தவும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பிற்பகல் 3.40 மணியளவில் தீயணைப்பு இலாகா வெளியிட்ட அறிவிப்பின்படி, 190 வீடுகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 148 வாகனங்கள் 11 மோட்டார் சைக்கிள்கள் தீயினால் சேதமுற்றன.
தீப்பிடித்த பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீப்பிழம்புகள் 30 மீட்டர் வரையில் வானில் உயர்ந்ததாகவும் அதன் வெப்ப அளவு 1,000 டிகிரி செல்சியல் வரை அதிகரித்ததாகவும் தீயணைப்பு இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யவும் வீடுகளைப் புதுப்பிக்கவும் சேதங்களால் ஏற்படும் செலவினங்களை பெட்ரோனாஸ் ஏற்றுக் கொள்ளும் என அறிவித்தார். தேவையான இழப்பீடுகளையும் பெட்ரோனாஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் என அவர் அறிவித்தார்.
முழுமையாக வீடுகள் எரிந்த உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட்டும் சேதமுற்ற வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,500 ரிங்கிட்டும் வழங்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
வானளாவ உயர்ந்த தீப்பிழம்புகளைப் பார்த்த வாகனமோட்டிகள் அந்தக் காட்சிகளை காணொலிகளாக சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.