
சென்னை: அண்மைய சில நாட்களாக தமிழ் நாடு அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. எடப்பாடி திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புதுடெல்லியில் சந்தித்தது – அதைத் தொடர்ந்து அண்ணாமலையும் புதுடெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார்.
இதற்கிடையில் அதிமுகவின் செங்கோட்டையனும் புதுடெல்லி சென்று அமித் ஷாவையும், நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததாக தகவல்கள் வெளிவந்தன.
அண்ணமாலை நடத்திய பத்திரிகை சந்திப்பில், “நான் சொன்ன சொல் மாறுவதில்லை, சாதாரண பாஜக தொண்டனாகத் தொடரத் தயார்” என அதிர்ச்சி தரும் வகையில் அறிவித்தார். இதன் மூலம் அண்ணாமலை தமிழ் நாடு பாஜக தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுவார் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து அண்ணாமலைக்குப் பதிலாக தமிழ் நாடு பாஜக தலைவராக யார் நியமிக்கப்படக் கூடும் என்ற ஆரூடங்களும் எழுந்திருக்கின்றன.
தற்போது பாஜக சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தமிழ் நாடு பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தமிழ் நாடு பாஜக தலைவராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஆகியோரும் பரிசீலிக்கப்படுகின்றனர் என்ற தகவலும் உண்டு.