கோலாலம்பூர்: மலேசியாவில் பிரபலமான ரொட்டி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மாசிமோ வணிக முத்திரை கொண்ட ரொட்டிகளை உற்பத்தி செய்யும் தி இத்தாலியன் பேக்கர் நிறுவனம். புத்ரா ஹைட்சில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து காரணமாக தனது தொழிற்சாலைக்கு எல்என்ஜி (LNG) என்னும் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால், தனது ரொட்டி பொருட்களின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 3) வெளியிட்ட அறிக்கையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் அடுத்த அறிவிப்பு வரை கடைகளில் தங்களது உற்பத்திப் பொருட்கள் தற்காலிகமாக குறைவாக இருக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எங்களது சமூக ஊடக பக்கங்களில் தொடர்ந்து அடுத்த கட்ட அறிவிப்புகளை வழங்குவோம். தேவையிருப்பினர் பயனர்கள் எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு தொலைபேசி எண்ணான 1800-22-6688 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்” என்று நிறுவனம் தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) புத்ரா ஹைட்சில் ஏற்பட்ட பேரழிவுத் தீயினால் சுமார் 30 மீட்டர் வரை உயர்ந்த தீப்பிழம்புகள், தீவிர வெப்பம் காரணமாக வரிசையாக வீடுகள், சொத்துக்கள், 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் உட்பட அழிந்தன.
வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 98 குடும்பங்களைச் சேர்ந்த 377 பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். இவர்களில், புத்ரா ஹைட்ஸ் மசூதி மண்டபத்தில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேரும், கமேலியா மண்டபத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேரும் உள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (ஏப்ரல் 2) போலவே உள்ளது. 31 நபர்கள் புத்ராஜெயா, செர்டாங், கிள்ளான், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள பொது மருத்துவமனைகளிலும், மற்ற 33 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.