வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உலகளாவிய வணிகப் போரை தீவிரப்படுத்தும் நோக்கில் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 2) பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மிகவும் அபாயகரமான இந்த வணிகப் போர் அமெரிக்காவுக்குப் பயனளிக்கும் என்று கூறப்பட்டாலும் அமெரிக்காவுக்கு சுமையை ஏற்படுத்தி அமெரிக்கப் பொருளாதாரத்தை மந்தநிலைக்குத் தள்ளக்கூடும்.
புதன்கிழமையன்று, டிரம்ப் ஒரு தேசிய பொருளாதார அவசரநிலையை அறிவித்து, அனைத்து நாடுகளுக்கும் குறைந்தது 10% வரி விதிப்பதாக அறிவித்தார். வெள்ளை மாளிகை அதிகாரிகளின் கூற்றுப்படி, அமெரிக்காவின் வணிக வைரிகளாகக் கருதப்படும் 60 நாடுகளுக்கு வரி விழுக்காடுகள் இன்னும் அதிகமாக இருக்கும்.

புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் வணிக வரிகளை எதிர்நோக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டார். அனைத்து கம்போடிய இறக்குமதிகளுக்கும் 49% என்ற அளவில் மிக உயர்ந்த தீர்வை விதிக்கப்படும். புதிதாக அறிவிக்கப்பட்ட மற்ற தீர்வை விகிதங்களில் வியட்நாமுக்கு 46%, சீனாவுக்கு 34% மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20% ஆகியவை அடங்கும்.
டிரம்ப் வெளியிட்ட பட்டியலின்படி மலேசியாவுக்கும் தீர்வை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் எந்த அளவுக்கு நமது நாட்டுக்குப் பாதிப்புகள் ஏற்படும் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
இந்தத் தீர்வைகள் “நமக்கு வளர்ச்சியைத் தரும்” என்று டிரம்ப் கூறினார். வருமான வரிகளை முக்கிய வருவாய் வடிவமாக குறைவாக நம்பியிருக்க, அமெரிக்க அரசாங்கத்திற்கு உதவும் ஒரு வழியாக தீர்வைகளை அதிபர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் பொருளாதார வல்லுநர்கள், இந்தத் திட்டத்தால் பயனர்களுக்கு பொருட்களுக்கு அதிக விலை செலுத்தும் நிலைமை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
இந்த தீர்வை அதிகரிப்பு மற்ற நாடுகளுடன் அமெரிக்காவை மேலும் அந்நியப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் நீண்டகால வணிகப் பங்காளிகளாக இருந்த ஜப்பான், தென் கொரியா போன்ற முக்கிய நட்பு நாடுகளுடன் அதிகமான அளவில் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.