Home Photo News ஆயர் கூனிங் இடைத் தேர்தல்: இந்திய வாக்குகள் தேசிய முன்னணிக்குத் திரும்புமா?

ஆயர் கூனிங் இடைத் தேர்தல்: இந்திய வாக்குகள் தேசிய முன்னணிக்குத் திரும்புமா?

63
0
SHARE
Ad

தாப்பா: ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் (பாரிசான் நேஷனல்) வேட்பாளராக தாப்பா அம்னோ செயலாளர் டாக்டர் முகமட் யூஸ்ரி பக்கிர் போட்டியிடுகிறார். பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரானி முகமட்  இதனை அறிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 7) தேசிய முன்னணி தேர்தல் இயந்திரத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியின்போது அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி தலைமையில், ஆயர் கூனிங் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியர் வாக்குகள் கிடைக்குமா?

தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் விவகாரம், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவராக ஒரு சீக்கியரான ஜக்டிப் சிங் நியமிக்கப்படலாம் என்ற சர்ச்சை, இவற்றுக்கு மத்தியில் இந்திய வாக்குகள் நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திற்கோ – அன்வார் இப்ராகிமின் மடானி அரசாங்கத்திற்கோ – அடுத்த பொதுத் தேர்தலில் கிடைக்காது என்ற ஆரூடங்கள் கூறப்படும் சூழ்நிலையில் ஆயர் கூனிங் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

சுமார் 58 விழுக்காட்டு மலாய் வாக்குகள் தேசிய முன்னணி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிகளுக்கிடையில் பிளவுபடும் எனக் கருதப்படும் வேளையில் 23 விழுக்காட்டு சீன வாக்குகளும் 14 விழுக்காட்டு இந்திய வாக்குகளும் இந்த இடைத் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதில் சிக்கல் என்னவென்றால், தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அகற்றப்பட்டக் கூடாது – அதன் பாரம்பரியத்துக்காக அதே இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும் – என முன்னணியில் போராடிய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், ஆயர் கூனிங் சட்டமன்றத்தின் இந்திய வாக்குகளைத் திரட்டித் தரும் பொறுப்பில் உள்ளார். தாப்பா நாடாளுமன்றத்தின் கீழ்வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றுதான் ஆயர் கூனிங்!

ஒற்றுமை அரசாங்கத்தின் முன்னணி தலைவர்கள் பலரும் ஆயர் கூனிங் இடைத் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆயர் கூனிங் இந்திய வாக்காளர்கள் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் விவகாரம், பினாங்கு இந்து அறப்பணி வாரிய சர்ச்சை ஆகியவற்றை மறந்து தங்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு வழங்குவார்களா? அல்லது தங்களின் எதிர்ப்பைக் காட்ட, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வாக்களிப்பார்களா? என்பதே பிரச்சாரங்களின் மைய விவாதமாகத் திகழும்!

தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தவிர, மூடா கட்சியும், பிஎஸ்எம் கட்சியும் இங்கே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

இதனால் வாக்குகள் சிதறும் வாய்ப்பும் உள்ளது.

தேசிய முன்னணி வேட்பாளர்
முகமட் யூஸ்ரி

பேராக் மந்திரி பெசார் சாரானி முகமட், ஆயர் கூனிங் தேசிய முன்னணி வேட்பாளர் யூஸ்ரி பாக்கிர், சாஹிட் ஹாமிடி…

மத அறிவியல் துறையில் சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் (UPSI) பல்கலைக் கழகத்தில் முனைவர் (டாக்டரேட்) பட்டம் பெற்ற டாக்டர் உஸ்தாஸ் முகமட் யூஸ்ரி தேசிய முன்னணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஈப்போவில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் இஸ்லாமியக் கல்வித் துறைத் தலைவராக உள்ளார்.

அவர் திருமணமானவர். நான்கு குழந்தைகளின் தந்தை.

“வாக்குப்பதிவில் நாங்கள் இலக்காக வைத்திருப்பது 18,000 வாக்குகள். இதில் சுமார் 46% வாக்காளர்கள் இளம் வயதினர், அதில் பலர் முதல் தடவை வாக்களிக்க உள்ளனர். அவர்களைச் சென்றடைய, மகளிர், இளைஞர், புத்ரி  அணிகள் திட்டமிட்டு செயற்பட உள்ளனர். இளைஞர்களை ஈர்க்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகள், திட்டங்கள் இக்குழுக்களால் முன்னெடுக்கப்படும்,” என பேராக் மந்திரி பெசார் கூறியிருக்கிறார்.

தொடர்ச்சியாக அம்னோ-தேசிய முன்னணியே வென்றுவந்த தொகுதி

காலமான ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின்

ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டிய வாக்களிப்பு ஏப்ரல் 22-இல் நடைபெறும்.

2022-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்னோ-தேசிய முன்னணி இங்கு வெற்றி பெற்றதால், மீண்டும் அந்தத் தொகுதி மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் மீண்டும் தேசிய முன்னணிக்கே ஒதுக்கப்படுகிறது.

பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் இங்கு பாஸ் களமிறங்குகிறது. இதன் காரணமாக, இந்திய, சீன வாக்குகள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குக் கிடைக்காது என்ற கருத்தும் நிலவுகிறது.

2022 பொதுத் தேர்தலில் இங்கு பெர்சாத்து வேட்பாளர் போட்டியிட்டார். பெர்சாத்து தற்போது பாஸ் கட்சிக்கு இந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளது.

ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் 31,897 வாக்காளர்கள் இருக்கின்றனர். டத்தோஶ்ரீ சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஆயர் கூனிங். மற்றொரு தொகுதி சென்டரியாங்.

தாப்பா தொகுதி அம்னோ தலைவருமான இஷாம், 2022-இல் நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில் 2,213 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில்   9,088 வாக்குகள் பெற்றார் இஷாம் ஷாருடின். அவரை எதிர்த்து நின்ற பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் மேஜர் டாக்டர் முகமட் நஸ்ரி ஹாஷிம் 6,875 வாக்குகள் பெற்றார். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் உஸ்தாஸ் பாரிட் 6,812 வாக்குகள் பெற்றார்.

2022 பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய 3 கூட்டணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து களம் கண்டன. தற்போது பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணி கூட்டணிகள் ஒன்றாக இணைந்து மடானி–ஒற்றுமை அரசாங்கத்தை நடத்தி வருவதால் ஆயர் கூனிங் தொகுதியில் பக்காத்தான் ஹாரப்பான் தேசிய முன்னணி வேட்பாளருக்கே ஆதரவு தருகிறது.

ஏப்ரல் 26-இல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் 19 வாக்களிப்பு மையங்களும் அவற்றில் 63 வாக்களிப்பு முகப்பிடங்களும் செயல்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இடைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் எதிர்வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வரும். வெளிநாட்டு வாக்காளர்கள், மற்ற ஊர்களில் இருக்கும் வாக்காளர்களுக்கான இயங்கலை வழியான வாக்களிப்புக்கான பதிவு தொடங்கப்படிருக்கிறது.

1986ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து, தொடர்ச்சியாக ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஆயர் கூனிங் தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளரால் வெல்லப்பட்டு வந்திருக்கும் தொகுதியாகும்.

மீண்டும் ஒருமுறை ஆயர் கூனிங்கை அம்னோ-தேசிய முன்னணி வெல்லுமா?

-இரா.முத்தரசன்