கோலாலம்பூர்: இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் உள்ள தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டத்தோஶ்ரீ எம்.சரவணன் “இது ஒருவரை ஒருவர் குறை சொல்லும் நேரமல்ல! மாறாக தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயப் பிரச்சனைக்குத் தீர்வுகள் காண வேண்டிய நேரம். நாங்களே தவறு செய்வதாக வைத்துக் கொண்டாலும், அதைப் பேசிக் கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. அனைவரும் இணைந்து நல்ல தீர்வைக் காண்போம்” என அறைகூவல் விடுத்தார்.
அதே வேளையில் இந்திய சமூகத்தை முட்டாள்களாக நினைத்து விடாதீர்கள் – ஒரு சிறிய ஆலயம்தானே இதுவென ஏளனமாக நினைக்காதீர்கள் – நேரம் வந்தால் இந்தியர்கள் காட்ட வேண்டிய முறையில் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்றும் சரவணன் எச்சரித்தார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார். முன்னாள் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகபாலனும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் ஆலோசனை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் டத்தோ பஞ்சமூர்த்தியும் சரவணனுடன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், ஆலயம் இங்கு இருப்பது தெரிந்தும் மாநகர் மன்றம் எவ்வாறு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு முன்வந்தது எனக் கேள்வி எழுப்பியது. அந்தத் தனியார் நிறுவனம் தான் வாங்கிய இடத்தில் ஆலயம் ஒன்று இருப்பதை நன்கு தெரிந்துதான் அந்த நிலத்தை வாங்கியது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
“இந்த ஆலயம் ஒருசிலர் கூறுவது போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம் மாற்றப்பட்ட ஆலயமல்ல! மாறாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே வீற்றிருந்து அம்மன் அருள்பாலித்து வரும் ஆலயம். பிரதமருக்கே இதுகுறித்து தவறான தகவல்களை சில தரப்புகள் தந்திருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றும் சரவணன் கேள்வி எழுப்பினார்.
இதே போன்ற ஒரு கருத்தை மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஏ.வைத்தியலிங்கம் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
“இது சமயம் சார்ந்த விவகாரம் என்பதால் அனைவரும் கருத்து சொல்ல வேண்டாம். பலருக்கு இந்த ஆலயத்தின் வரலாறு தெரியவில்லை” என்றும் சரவணன் சுட்டிக் காட்டினார்.
“டத்தோ பண்டார், டத்தோ ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் இந்த ஆலயம் உடைபடாது என உறுதியளித்திருக்கிறார்கள். அதனால் பொறுமை காப்போம்” என்றும் கூறிய சரவணன் “ஒருசிலர் கூறுவது போல் இந்த ஆலயம் வேறொரு இடத்தில் இருந்தது – பின்னர் உடைக்கப்பட்டு இங்கு இடமாற்றம் செய்யப்பட்டது – என்பது உண்மையல்ல! இந்த ஆலயம் பன்னெடுங்காலமாக இங்கேயேதான் இருந்து வருகிறது. ஆலயத்திற்குப் பின்புறம் சில அடிகள் தூரத்திற்கான இடம் சாலை நிர்மாணிப்புக்காக விட்டுக் கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் முன்பு ஆலய அர்ச்சகர்கள் பணியாளர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் இருந்தன. 2008-இல் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டபோது, மாநகர் மன்றத்தின் வசம்தான் இருந்தது. 2014-இல் தான் தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்திருக்கும் இடம் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. அப்போதும் கூட்டரசுப் பிரதேச அமைச்சில் நானோ, லோகபாலனோ இல்லை. அரசாங்கத் தலைமைச் செயலாளர் வசம்தான் மாநகர் மன்றம் செயல்பட்டது” என்றும் சரவணன் குறிப்பிட்டார்.
“எனவே, ஒருசிலர் கூறுவதுபோல் இந்த ஆலயம் சட்டவிரோதமானது – ‘ஹாராம்’ அல்ல – மாறாக ஹாலால் – சட்டப்படி செயல்பட்ட ஆலயம் – என சரவணன் வலியுறுத்தினார். இந்த ஆலயத்திற்கான தண்ணீர், மின்சார வசதிகளை மாநகர் மன்றம் வழங்கியிருப்பதாலும் இந்த ஆலயம் நீண்ட காலமாக இங்கேயே செயல்பட்டு வரும் ஆலயம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தின் மீது நாங்கள் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்த ஆலய விவகாரத்திற்கு முறையான தீர்வு காண்பார்கள் எனக் கருதுகிறேன்” என்றும் சரவணன் தெரிவித்தார்.