கோலாலம்பூர்: நாடு முழுவதும் இந்துக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி வரும் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் இதுவரையில் கருத்து சொல்லாமல் இருந்து வந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெறவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் விரிவான விளக்கம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை (மார்ச் 22) சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொலியில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருவதால், இதுகுறித்து கருத்து சொல்ல வேண்டாம் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார் என சரவணன் குறிப்பிட்டார்.
ஆனால், தன் பெயர் இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்புகளால் தேவையின்றி இழுக்கப்பட்டதால் வேறு வழியின்றி இதுகுறித்து முழு விளக்கம் தர முன்வந்ததாக சரவணன் குறிப்பிட்டார்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் இன்று ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு மறைந்த துன் சாமிவேலு, டத்தோ பஞ்சமூர்த்தி, ஆகியோருடன் சேர்ந்து தானும் பாடுபட்டதாக சரவணன் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அனைவரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் சரவணன் அறிவித்திருக்கிறார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய வளாகத்தில் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும்.