Home நாடு மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவராகிறார் தெங்கு சப்ருல்!

மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவராகிறார் தெங்கு சப்ருல்!

174
0
SHARE
Ad
தெங்கு சாப்ருல்

புத்ரா ஜெயா: அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் செனட்டர் தெங்கு சப்ருல் மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தான் போட்டியிடுவதற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமிடம் தெரிவித்ததாகவும் அவரும் அதற்கான பச்சைக் கொடியைக் காட்டியதாகவும் தெங்கு சப்ருல் தெரிவித்தார்.

தற்போது செனட்டராக இருக்கும் தெங்கு சப்ருலின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 2025-இல் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் அவர் அமைச்சராகத் தொடர முடியாது. அதன் காரணமாக அவர் மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவராக வர முடிவு செய்திருக்கிறார் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

பொதுவாக அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்கள் விளையாட்டு சங்கங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது.

2025-2029 வரையிலான 4 ஆண்டுக்காலத் தவணைக்கான மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராக தெங்கு சப்ருல் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது அம்னோ உச்சமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

டத்தோ வி.சுப்பிரமணியம்

மலேசியப் பூப்பந்து சங்கத்தின் துணைத் தலைவரான டத்தோ வி.சுப்பிரமணியம் தற்போது மலேசியப் பூப்பந்து சங்கத்தின் இடைக் காலத் தலைவராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

மலேசிய பூப்பந்து சங்கத்தின் அடுத்த ஆண்டுக் கூட்டம் மே 10-ஆம் தேதி நடைபெறும்போது அந்தக் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஐஎம்பி வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான தெங்கு சப்ருல், முஹிடின் யாசின் பிரதமரானபோது மார்ச் 2020-இல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவையிலும் தெங்கு சப்ருல் நிதியமைச்சராகத் தொடர்ந்தார்.

இதற்கிடையில் பூப்பந்து சங்கத்தின் இடைக்காலத் தலைவரான வி.சுப்பிரமணியம் சங்கத்தின் பெரும்பான்மை செயற்குழு உறுப்பினர்கள் தெங்கு சப்ருலை தலைவராக முன்மொழிய ஒப்புக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

பூப்பந்து சங்கத்தை திறமையாகவும் வலிமையுடனும் வழிநடத்த ஒரு தலைமைத்துவம் தேவை என்பதால் தெங்கு சப்ருலின் வரவு அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் சுப்பிரமணியம் கூறினார்.