Home நாடு தெங்கு சப்ருல் பிகேஆர் கட்சிக்குத் தாவுகிறாரா? அம்னோ – பிகேஆர் மோதல் வெடிக்குமா?

தெங்கு சப்ருல் பிகேஆர் கட்சிக்குத் தாவுகிறாரா? அம்னோ – பிகேஆர் மோதல் வெடிக்குமா?

132
0
SHARE
Ad
தெங்கு சாப்ருல்

புத்ரா ஜெயா: தற்போது அம்னோ சார்பில் அமைச்சராக இருக்கும் தெங்கு சப்ருல் தெங்கு அசிஸ் பிகேஆர் கட்சிக்குத் தாவப் போகிறார் என ஊடகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து அம்னோ-பிகேஆர் கட்சிகளுக்கு இடையில் மோதல் எழுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. காரணம், சிஐஎம்பி வங்கியில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த தெங்கு சப்ருல் முஹிடின் யாசின் பிரதமரான போது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அப்போது எந்தக் கட்சியில் அவர் இருக்கிறார் என்பதுகூட அறிவிக்கப்படவில்லை. பின்னர் அவர் அம்னோ கட்சியில் உறுப்பினராக இருக்கிறார் என்ற தகவல் வெளியிடப்பட்டது.

எனினும் முஹிடின் தொடர்ந்து அவரை அமைச்சராக வைத்திருந்தார். 2022 பொதுத் தேர்தலில் அம்னோ வேட்பாளராக அவர் கோலசிலாங்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெறலாம் என்ற ஆரூடங்கள் நிலவிய நிலையில் அவரைத் தோற்கடிப்பதற்காகவே, அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நடப்பு சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் அமானா கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். தெங்கு சப்ருல் தோல்வியடைந்தார்.

#TamilSchoolmychoice

அம்னோ – தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி – ஆகியவற்றுக்கிடையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, சப்ருல் மீண்டும் அம்னோவால் முன்மொழியப்பட்டு, அனைத்துலக வாணிபத் துறை அமைச்சராக அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் நியமனம் பெற்றார். இதற்கிடையில் சிலாங்கூர் அம்னோவின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

அண்மையக் காலமாக, அன்வாரின் வெளிநாட்டுப் பயணங்களில் தெங்கு சப்ருல் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது.

தெங்கு சப்ருலை அரசியல் ரீதியாகவும், அரசாங்க அமைச்சராகவும் உருவாக்கி உயர்த்தி விட்ட அம்னோ, அவர் இப்போது பிகேஆர் கட்சியில் இணைவதை எப்படி எடுத்துக் கொள்ளும்?

அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இருவரும் இணைந்து பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறார்களா? அல்லது தெங்கு சப்ருல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தாரா? ஒரே கூட்டணியில் இருக்கும் இரண்டு கட்சிகளில் இருந்து ஓர் அமைச்சர் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவுவது அரசியல் ஒழுக்கமா? இதனால் அம்னோ-பிகேஆர் கட்சிகளுக்கிடையில் மோதல்கள் வெடிக்குமா? தெங்கு சப்ருலுக்கு பதிலாக அம்னோ இன்னொரு அமைச்சரை முன்மொழியுமா? என அடுத்தடுத்து கேள்விகள் எழக் கூடும் – தெங்கு சப்ருல் பிகேஆரில் இணைவது உறுதியானால்!

தெங்கு சப்ருல் தற்போது செனட்டராகப் பதவி வகிக்கிறார். அவரின் செனட்டர் பதவிக் காலம் டிசம்பர் 2025-இல் முடிவுக்கு வருகிறது.

எதிர்வரும் டிசம்பர் 15-ஆம் தேதி பிகேஆர் கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பல சட்டத்திருத்தங்கள் பிகேஆர் கட்சியின் சட்டவிதிகளில் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் உலவுகின்றன.

அந்த மாநாட்டிலேயே தெங்கு சப்ருல் பிகேஆரில் இணைவது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

-இரா.முத்தரசன்