Home நாடு கோலசிலாங்கூர்: வெல்லப் போவது நிதி அமைச்சரா? சுகாதார அமைச்சரா?

கோலசிலாங்கூர்: வெல்லப் போவது நிதி அமைச்சரா? சுகாதார அமைச்சரா?

394
0
SHARE
Ad

(அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது சிலாங்கூரிலுள்ள கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி. மோதுவது இரண்டு முன்னாள் அமைச்சர்கள். ஒருவர் நிதியமைச்சராகவும், இன்னொருவர் சுகாதார அமைச்சராகவும் இருந்தவர். அந்தத் தொகுதி நிலவரம் குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

சிலாங்கூரில் பலவீனமாகக் கருதப்பட்ட அம்னோ இந்த முறை  இரண்டு பிரபலமான  வேட்பாளர்களை நிறுத்தி அனைவரையும்  அந்த மாநிலத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

கவனத்தை ஈர்த்துள்ள அந்த இருவரில் கைரி ஜமாலுடின் ஒருவர். சுங்கை பூலோவில் போட்டியிடுகிறார். மற்றொருவர் நடப்பு நிதி அமைச்சராக இருந்த  தெங்கு ஸஃப்ருல் அஸிஸ்.

சிஐஎம்பி வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான  தெங்கு ஸஃப்ரூல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி அமைச்சராக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மிகப் பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்கள் எதுவும்  அவரை நோக்கி வைக்கப்படவில்லை. சிலாங்கூரின் கோலசிலாங்கூர் தொகுதியில் அவர் தேசிய முன்னணி சார்பில் அம்னோ வேட்பாளராக  நிறுத்தப்பட்டிருக்கிறார்.

மீண்டும் கோலசிலாங்கூரில் போட்டியிடும் சூல்கிப்ளி அமாட்

தெங்கு ஸஃப்ருலை எதிர்த்து அமானா கட்சியின் சார்பில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளராக போட்டியிடுபவர் டாக்டர் சூல்கிப்ளி பின் அமாட். முன்னாள் சுகாதார அமைச்சர்.

சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலத்தில்  ஒரு மருத்துவராக இல்லாவிட்டாலும்  மிகச் சிறப்பாக அந்த அமைச்சின் பொறுப்புகளைச் செயல்படுத்தியவர். அவர் மீதும் பெரிதாக எந்த குறைகளும் எழுந்ததில்லை .

இவ்வாறு தத்தம் அமைச்சு பொறுப்புகளை சிறப்பாக பணியாற்றிய இருவர் நேரடியாக களத்தில் மோதுவதால் வெல்லப் போவது நிதி அமைச்சா? அல்லது சுகாதார அமைச்சா? என்ற பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது கோலசிலாங்கூரின் பிரச்சாரக் களம்.

சிலாங்கூர் மாநிலத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் தெங்கு ஸஃப்ருலுக்குக் கூடுதல் ஆதரவும் செல்வாக்கும் கிடைக்கக்கூடும் என்ற  எண்ணம் பரவலாக எழுந்துள்ளது.

அதேவேளையில்,  சூல்கிப்ளி அமாட் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அந்தத் தொகுதியை நன்கு அறிந்தவர். பராமரித்தவர்.

2018 பொதுத்தேர்தலில் 8,498 வாக்குகள் பெரும்பான்மையில் இந்தத் தொகுதியை அம்னோவிடமிருந்து கைப்பற்றியவர். இந்த முறை போட்டியிடமாட்டேன் என அவர் முதலில் கூறியிருந்தார். ஆனால், வலிமையான வேட்பாளராகக் கருதப்படும் தெங்கு ஸஃப்ருல் அம்னோவால் களமிறக்கப்பட்டதால் – தொகுதியைக் காப்பாற்ற மீண்டும் இங்கு போட்டியிட முன்வந்திருக்கிறார் சூல்கிப்ளி.

தெங்கு ஸஃப்ருலுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரச்சாரங்கள்

தெங்கு ஸஃப்ருலை நிதி அமைச்சராக  நியமித்தது பிரதமராக இருந்த டான்ஸ்ரீ முஹிடின் யாசின். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்க ஆட்சியின்போது செனட்டராகவும் நிதி அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டவர் தெங்கு ஸஃப்ருல்.

ஆனால், பின்னர் அம்னோவின் இஸ்மாயில் சப்ரி தலைமையில்  புதிய அரசாங்கம் அமைந்ததும் அதிலும் நிதி அமைச்சராக தொடர்ந்து நீடித்தார் ஸஃப்ருல்.

நான் எந்த கட்சியையும் சாராதவன் என்ற நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் அவர். ஆனால், சில மாதங்களுக்கு முன்னால், நான் அம்னோவின் நீண்ட கால உறுப்பினர் என்றார். கோலசிலாங்கூரில்  போட்டியிடுவதற்கும் அவர் முன்னேற்பாடாக பல முறை அந்த தொகுதிக்குச் சென்று தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டார்.

இப்போதோ முழுக்க முழுக்க அம்னோ வேட்பாளராகிவிட்டார்.  இந்த முரண்பாடுகள் அவருக்கு எதிரான பிரச்சாரங்களாக முன் வைக்கப்படுகின்றன.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் வாய்ப்பு எப்படி?

கோலசிலாங்கூரில் பெரிக்காத்தான் கூட்டணியும் போட்டியிடுகிறது. இங்கு உஸ்தாஸ் முகமட் நூர் ஷாஹார் என்பவர் அந்த கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால்  பெர்சத்து  கட்சியின் ஆதரவோடு கணிசமான வாக்குகளைப் பெறுவார் என நம்பப்படுகிறது.

2018-இல் இங்கு போட்டியிட்ட பாஸ் கட்சி 8,535 வாக்குகளைப் பெற்றது.  இந்த வாக்குகளையும் சேர்ந்து பார்க்கும்போது பெரிக்காத்தான் கூட்டணி வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என்பது உறுதி.

பெர்ஜுவாங்  கட்சி சார்பாக போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர்

கோலசிலாங்கூர் தேர்தல் களத்தின் வெப்பம் அதிகரித்திருப்பதற்கு  இன்னொரு காரணமும் சேர்ந்திருக்கிறது. பெஜுவாங் கட்சியும் இங்கு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது.

ஜெரம் சட்டமன்ற உறுப்பினரான ஷாயிட் ரோஸ்லி இங்கு பெஜுவாங் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். ஜெரம் சட்டமன்றத்தின் நடப்பு உறுப்பினராக இவர் இருக்கிறார். நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர் என்பது இவருக்கிருக்கும் இன்னொரு பிரச்சார பலம்.

கோலசிலாங்கூர் தொகுதியின் கீழ் வரும்  மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஈஜோக், ஜெரம், குவாங் ஆகியவையாகும்.

இந்த மூன்று தொகுதிகளுமே 2018இல் பக்கத்தான் கூட்டணியால் கைப்பற்றப்பட்டன.

ஈஜோக் தொகுதியில்  பிகேஆர் வெற்றி பெற்றது.  ஜெரம், குவாங் தொகுதிகளில் பெர்சத்து கட்சி வெற்றி பெற்றது.

ஜெரம் தொகுதியில் பெர்சத்து கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் ஷாயிட் ரோஸ்லி. பெர்சத்து பிளவு பட்டபோது  அவர் முஹிடின் யாசின் பக்கம் சாயாமல்  மகாதீர் பக்கம் உறுதியாக நின்றார்.

அதன் காரணமாக  தற்போது பெஜுவாங் கட்சியின் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். பொதுவாக பெஜுவாங் கட்சி பல மாநிலங்களில்  பின்தங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கோலசிலாங்கூரில் நிலைமை வேறு.  இங்கு சட்டமன்ற  உறுப்பினர் ஒருவரே நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவதால் அந்த அனுபவம்,  செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கும்  கணிசமான  வாக்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இவ்வாறாக  நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ள  கோலசிலாங்கூரில்  மலாய் வாக்குகள் நான்கு அணிகளாக – கணிசமான அளவில்  பிளவுபடும்.

102,951 பதிவு பெற்ற வாக்குகளை கோலசிலாங்கூர் கொண்டிருக்கிறது. 2018 கணக்கெடுக்கின்படி  இங்கு 66  விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்களாவர். 13 விழுக்காட்டினர்  சீனர்கள். இந்திய வாக்காளர்கள் 21 விழுக்காட்டினர்.

இந்தத் தொகுதியில் சீன வாக்காளர்களைவிட இந்திய வாக்காளர்கள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம். மலாய் வாக்குகள் 3 அணிகளாக பிளவுபடப் போகின்றன. மூவருமே  மலாய் வேட்பாளர்கள்.

இந்திய வேட்பாளர்கள் யார் பக்கம்? யாருக்கு அவர்களின் ஓட்டு? அதை வைத்துத்தான் கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியாளரும்  நிர்ணயிக்கப்படுவார்.

-இரா.முத்தரசன்