Home நாடு லிம் கிட் சியாங் மகள் – லிம் ஹூய் யிங் – மீண்டும் செனட்டராகத் தேர்வு

லிம் கிட் சியாங் மகள் – லிம் ஹூய் யிங் – மீண்டும் செனட்டராகத் தேர்வு

759
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு செனட்டர்களில் ஒருவராக ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் மகள் லிம் ஹூய் யிங் தேர்வாகியிருக்கிறார்.

மற்றொருவர் பிகேஆர் கட்சியிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கும் பாட்லினா சித்திக். இவரின் தந்தை சித்திக், அபிம் எனப்படும் இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் முன்னாள் தலைவராவார். அண்மையில் சித்திக் காலமானார். அதைத் தொடர்ந்து அவரின் மகள் பினாங்கு மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் இரண்டு செனட்டர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற மேலவை என அழைக்கப்படும் டேவான் நெகாரா – செனட்டர்கள் அவையில் – மாமன்னரால் செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த நியமனங்கள் தவிர, ஒவ்வொரு மாநிலமும் தலா இரண்டு செனட்டர்களை தங்களின் சட்டமன்ற அவையின் மூலம் தேர்ந்தெடுத்து 3 ஆண்டுகால தவணைக்கு நியமிக்க முடியும்.

#TamilSchoolmychoice

அதன்படி பினாங்கு மாநில சட்டமன்றம் தேர்ந்தெடுத்த இரண்டு செனட்டர்களில் ஒருவர்தான் லிம் கிட் சியாங்கின் மகளான லிம் ஹூய் யிங். இரண்டாவது தவணைக்கு செனட்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார் இவர்.

58 வயதான லிம் ஹூய் யிங் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கின் இளைய சகோதரியுமாவார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பட்டப்படிப்பு படித்தவர் இவர்.

லிம் ஹூய் யிங் பினாங்கு மாநில ஜசெகவின் செயலாளருமாவார்.

தந்தை-மகன் என்ற லிம் கிட் சியாங் குடும்பத்தின் ஆதிக்கம் ஜசெகவில் தொடர்ந்து இருந்து வருகிறது.

இப்போது மற்றொரு குடும்ப உறுப்பினரான லிம் ஹூய் யிங்கின் ஆதிக்கமும் கட்சியில் அதிகரித்து வருகிறது என்பதையே அவரின் செனட்டர் நியமனம் எடுத்துக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.