
கோலாலம்பூர் : இன்று பட்டவொர்த் அமர்வு நீதிமன்றத்தில் 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு ஆதரவாக கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ குரல் கொடுத்துள்ளார்.
“சட்ட நடவடிக்கை என்ற போர்வையில் எடுக்கப்படும் அரசியல் பதிலடிதான் இத்தகைய நடவடிக்கை. ஜனநாயக அமைப்புகளின் மீதான நேர்மையையும் அவை எந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பதையும் இத்தகைய நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன” என சார்ல்ஸ் மேலும் தெரிவித்தார்.
இராமசாமி மீதான நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த ஜசெகவைச் சேர்ந்த சார்ல்ஸ், தலைமைத்துவம் என்பது நமக்கு அதிருப்திகளைத் தருகின்ற உண்மைகளை எதிர்கொள்வதுதானே தவிர, அவற்றின் வாயை மூடிக் கட்டுப்படுத்துவது அல்ல என்றும் கூறினார்.
“பொதுமக்களுக்கு தேவை எழுந்திருக்கும் கேள்விகளுக்கான விடைகள் அத்துடன் சீர்திருத்தங்கள், எதிர்கால நடவடிக்கைகள் – இவைதானே தவிர, நீதியை நிலைநாட்டுகிறோம் என்ற போர்வையில் நாடகமாடுவது அல்ல” என இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் சார்ல்ஸ் தெரிவித்தார்.
இராமசாமி மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே, ஊழல் தடுப்பு ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டவைதான் என்றும் சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், நிர்வாக ரீதியாகவும் ஜனநாயக அமைப்புகள் மீதான மதிப்பீடுகள் சரிந்து வரும் நிலையிலும் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீதான கண்டனங்களை இராமசாமி தொடர்ந்து எழுப்பி வரும் காலகட்டத்தில் அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திடீரென சுமத்தப்படுவது அரசியல் பழிவாங்கும் செயலாகத்தான் பார்க்கப்படும் என்றும் சார்ல்ஸ் சாடினார்.
பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வனும் இராமசாமி மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதி கையாளப்பட்ட விதத்தில் நம்பிக்கை மோசடி செய்ததாக அந்த வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி மீது இன்று நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. அந்த நம்பிக்கை மோசடிகள் தொடர்பான மொத்த மதிப்பு RM859,131.29 ஆகும்.
2010 முதல் 2023 இராமசாமி பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராகச் செயலாற்றியிருக்கிறார். மே 2019 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தில் அறப்பணி வாரியத்தின் நிதியை வாரியக் கூட்டத்தின் அனுமதி இன்றி அவர் பயன்படுத்தியதாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் விவரிக்கின்றன.
தங்கக் கவசம் பொருத்தப்பட்ட தங்க ரதம் 2019-இல் பெறப்பட்டது, தனிநபர்களுக்கான கல்வி உதவி நிதிகள், மருத்துவ உதவிகள் ஆகியவை தொடர்பில் அந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
76 வயதான இராமசாமி, முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வருமாவார். குற்றவியல் பிரிவு 409-இன் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, பிரம்படிகள், அபராதம் ஆகியவை அவர்மீது விதிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வயது காரணமாக அவருக்கு பிரம்படிகள் வழங்கப்பட மாட்டாது.
பட்டவொர்த் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) நீதிபதி சுல்ஹாஸ்மி அப்துல்லா முன்னிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் இராமசாமி மீது மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குற்றச்சாட்டுகளை மறுத்து இராமசாமி விசாரணை கோரினார்.