Home நாடு பேராசிரியர் இராமசாமி மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்!

பேராசிரியர் இராமசாமி மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்!

76
0
SHARE
Ad
பேராசிரியர் பி.ராமசாமி

பினாங்கு: பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமிக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நாளை புதன்கிழமை (மே 14) நீதிமன்றத்தில் குற்ற்றச்சாட்டுகளை கொண்டு வரவிருப்பதாக, உரிமை கட்சியின் செயலாளரும் பினாங்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சத்தீஸ் முனியாண்டி தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான இராமசாமியை மலேசிய ஊழல் தடுப்புப் ஆணையம் (MACC) நேற்று திங்கட்கிழமை (12 மே) பினாங்கில் உள்ள அதன் தலைமையகத்திற்கு நேரில் வரும்படி உத்தரவிட்டது. அவர் தலைமையகத்திற்கு வருகை தந்தபோது, மே 14, 2025, புதன்கிழமை, பட்டவொர்த் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்), ஊழல் தடுப்பு ஆணைய (MACC) சட்டத்தின் பிரிவு 23(1)ன் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படுமென தெரிவிக்கப்பட்டது என்றும் சத்தீஸ் முனியாண்டி மேலும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் 2017-ல் நிகழ்ந்த தங்கரதம் கொள்முதல், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்பிலானதாக இருக்கும் எனத் தாங்கள் நம்புவதாகவும் சத்தீஸ் முனியாண்டி பேராசிரியர் இராமசாமியின் முகநூல் பக்கத்தில் இன்று பதிவிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

சத்தீஸ் முனியாண்டி
#TamilSchoolmychoice

“இந்த விவகாரங்கள் 2017 ஆம் ஆண்டிலேயே ஊழல் தடுப்பு ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. அப்போது முதல் இந்த விவகாரங்களைப் பயன்படுத்தி இராமசாமியின் நற்பெயருக்குக் களங்கள் விளைவிக்கும் வகையில், அவரின் அரசியல் எதிரிகளால் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வந்தன” எனக் குறிப்பிட்ட சத்தீஸ் முனியாண்டி, “புத்ராஜெயாவிலிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், பினாங்கில் உள்ள ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என நாங்கள் அறிகிறோம். பிரதமர் அன்வார் இப்ராகிமின் வாரிசு அரசியல், நிர்வாகக் குறைபாடுகள் போன்ற விவகாரங்களில் அன்வாருக்கு எதிரான கருத்துகளை பேராசிரியர் இராமசாமி பகிரங்கமாக வெளியிட்டு வந்த நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படுவது தற்செயலானது அல்ல என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றும் சத்தீஸ் முனியாண்டி தனது பதிவில் தெரிவித்தார்.

“எங்கள் பார்வையில், இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, சில ஜசெக தலைவர்கள் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்குமாறு ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர் என்பதையும் நாங்கள் அறிவோம். இந்நிலையில், இந்திய வாக்காளர்கள் பிகேஆர், ஜசெக போன்ற பல இனக் கட்சிகள் மீதானத் தங்களின் ஆதரவை அதிக அளவில் விலக்கிக் கொண்டு வருவதால், மடானி (MADANI) ஆட்சி தங்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது” என்றும் சத்தீஸ் முனியாண்டி குற்றம் சாட்டினார்.

பேராசிரியர் இராமசாமியும், உரிமை இயக்கமும், இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு போராடுவோம் – இறுதியில் உண்மை வெல்லும் – என்பதில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி விமர்சகர்களை அச்சுறுத்த முயற்சி செய்பவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் – அதிகாரம் என்பது எப்போதும் நிரந்தரமல்ல! இது போன்ற அரசியல் நோக்கங்களைக் கொண்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி பேராசிரியர் இராமசாமியை அடக்கி விடலாம் என பிரதமர் அன்வாரும் அவரது மடானி ஆட்சியும் நினைத்தால், அது அவர்கள் செய்யும் தவறான முடிவாகவே அமையும்” என்றும் சத்தீஸ் முனியாண்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

உரிமை கட்சியும் பேராசிரியர் இராமசாமியும் இந்த ஆட்சியை எதிர்த்து, இனி மேலும் வலிமையாக போராட இறுதிவரை உறுதியுடன் இயங்குவார்கள் என்றும் சத்தீஸ் முனியாண்டி மேலும் தெரிவித்தார்.