Home Featured நாடு பினாங்கு தைப்பூசம்: முதலில் புறப்படப் போவது ‘தங்க’ முருகனா? வெள்ளி முருகனா?

பினாங்கு தைப்பூசம்: முதலில் புறப்படப் போவது ‘தங்க’ முருகனா? வெள்ளி முருகனா?

1300
0
SHARE
Ad

ramasamy-golden chariot.png-feature

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தின் வெள்ளி இரத ஊர்வலம் என்பது நாடளவிலும், உலக அளவிலும் பிரசித்தி பெற்றது. ஆயிரக்கணக்கான அளவில் மற்ற இனத்தவர்களையும் ஈர்த்து இந்துக்களின் பெருமையை நிலைநாட்டி வந்துள்ள நிகழ்ச்சி அது.

ஆனால், இன்று பினாங்கு மாநிலமே இரண்டாகிக் கிடக்கிறது. இரதத்தில் இத்தனை ஆண்டுகளாக வீதி உலா வந்த முருகன் இன்று இரண்டாகி விட்டார் – தங்கம் என்றும், வெள்ளி என்றும்!

#TamilSchoolmychoice

ஆண்டாண்டு காலமாக செட்டியார்கள் எனப்படும் நகரத்தார் சமூகத்தினரால் நடத்தப்பட்டு வந்த வெள்ளி இரத ஊர்வலத்திற்குப் போட்டியாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமியைத் தலைவராகக் கொண்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் தங்க இரதம் ஒன்று உருவாக்கப்பட்டு, பினாங்கு மாநில வீதிகளில் தைப்பூசத்தை முன்னிட்டு இந்த ஆண்டு முதன் முறையாக ஊர்வலம் நடத்தப்படவிருக்கின்றது.

அதை விட முக்கியமாக, நமக்கு நாமே வெட்கித் தலைகுனியும் வண்ணம், இதில் எந்த இரதம் முதலில் ஊர்வலமாகச் செல்ல வேண்டும் என்ற போட்டா போட்டியும், சர்ச்சையும் சேர்ந்து கொண்டுள்ளது.

எந்த இரதம் முதலில்? தங்கமா? வெள்ளியா?

பிப்ரவரி 9-ஆம் தேதி வியாழக்கிழமை தைப்பூசத் திருநாள். வழக்கமாக ஒருநாளுக்கு முன்பாக அதிகாலையில் வெள்ளி இரதம் புறப்படும். ஆனால், இந்த முறை பிப்ரவரி 7-ஆம் தேதி, அதாவது செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணிக்கே நகரத்தார்கள் நடத்தும் வெள்ளி இரத ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பினாங்கு காவல் துறையினருடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது பிப்ரவரி 8-ஆம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு, வெள்ளி இரத ஊர்வல புறப்பாடுக்கு 90 நிமிடங்கள் முன்பாக தங்க இரத ஊர்வலம் தொடங்கும் என்பது இரு தரப்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது என இராமசாமி தெரிவித்துள்ளார்.

ramasamy-golden chariot

தங்க இரதம் உருவாகி வந்த தருணத்தில் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி…

இந்த உடன்பாட்டுக்கு மாறாக, பிப்ரவரி 7-ஆம் தேதி இரவு 11 மணிக்கு – தங்க இரதம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே – வெள்ளி இரதம் புறப்படும் என நகரத்தார்கள் சார்பில் அறிவிக்கப்பட, அதற்காகக் கொந்தளித்திருக்கின்றார் இராமசாமி.

தற்போது தங்க இரதம் பிப்ரவரி 7-ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு – அதாவது வெள்ளி இரதம் புறப்படும் என அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் முன்பாகப் புறப்படும் என அறிவித்துள்ளார்.

இப்படியே, போட்டி போட்டுக் கொண்டு நாளையே ஏதாவது ஒரு இரதம் யாருக்கும் சொல்லாமல் புறப்பட்டு சென்றுவிடலாம் எனக் கேலி பேசும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

இந்து மதத்தையும், அதன் புனித, பாரம்பரிய சம்பிராதயங்களையும் நாமே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து கேவலப்படுத்திக் கொள்கிறோமா என்ற எண்ணம் இன்று பலரிடத்திலும் எழுந்துள்ளது.

இரத ஊர்வலம் ஏன்?

ஓர் ஆலயத்தின் சார்பாக ஏன் இரத ஊர்வலம் நடத்தப்படுகிறது, ஆதி காலத்தில் இந்த பாரம்பரியம் எப்படித் தொடங்கியது, அதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன, என நாம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது.

இரத ஊர்வலம் என்பது பெருமைக்காக நடத்தப்படும் ஒன்றல்ல. அதன் பெருமை பாரம்பரியத்தில்தான் உள்ளதே தவிர, இரதம் எந்த உலோகத்தில் உருவாக்கப்பட்டது – தங்கத்திலா? வெள்ளியிலா என்பதில் அல்ல!

இத்தனைக்கும் பழங்கால இரதங்கள் மரத்தால்தான் செய்யப்பட்டன!

இரத ஊர்வலம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஏன் ஆதிகாலத்தில் தொடங்கியது என்பதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் உண்டு.

அந்தக் காலத்தில் அனைவரும் ஆலயங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. குறிப்பாக, உடல் ஊனமுற்றவர்கள், முதியவர்கள், நோயுற்றவர்கள் இவர்களெல்லாம் ஆலயங்களுக்கு நடந்து சென்று ஆண்டவனை தரிசிக்க முடியாத சூழ்நிலை இருந்தது.

அப்போது வாகன வசதிகள் இல்லை. மாட்டு வண்டிகளில் கூட போய், ஆலய தரிசனம் காண முடியாத ஏழ்மையில் ஒரு கூட்டம் இருந்தது.

penang-thaipusam-silver chariot

பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த நகரத்தார்களின் வெள்ளி இரத ஊர்வலம்…(கோப்புப் படம்)

அதை விட முக்கியமாக, ஒருசில சாதி வெறியர்களின் ஆதிக்கத்தால் சில சமூகப் பிரிவினர் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் இருந்தன. இதனால், அந்த குறிப்பிட்ட சமூகப் பிரிவினரும் கடவுளை வணங்குவதற்கு ஏதுவாக, இரத ஊர்வலம் நடத்தப்பட்டது. உற்சவ மூர்த்தி வீதிகளில் உலா வரும்போது தடைசெய்யப்பட்ட சமூகப் பிரிவினரும் ஆண்டவனைத் தரிசிக்க வழங்கப்படும் வாய்ப்பாகவும் இரத ஊர்வலம் பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று நிலைமைகள் மலேசியாவில் மாறி, இரதம் வெள்ளியில், இலட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்பில் உருவாக்கப்பட்டு வீதிகளில் உலா வருகின்றது. மகிழ்ச்சிதான்!

ஆனால், தங்கம் என்றும் வரும்போது, தங்கத்தால் செய்யப்பட்ட இரதம் வீதிகளில் உலா வருவது ஆகம விதிப்படி சரிதானா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

உதாரணமாக, தைப்பூசத்திற்குப் புகழ்பெற்ற பழனியில் தங்கத் தேர் இருந்தாலும், அந்தத் தேர் ஆலய வளாகத்திற்குள்தான் பக்தர்களால், அவர்களின் வேண்டுதல்களுக்கேற்ப இழுத்துச் செல்லப்படுகின்றது. வீதிகளில் உலா வருவதில்லை.

நகரத்தார் சமூகத்தைக் குறை கூறலாமா?

நகரத்தார் சமூகத்தைப் பற்றி சில குறைகூறல்கள் இருக்கலாம். ஆனால், சமய விவகாரங்கள், ஆலயங்களுக்கான அறப்பணிகள் என்று பின்னோக்கிப் பார்த்தால், இந்தியா, மலேசியா உட்பட உலகம் முழுவதும் அவர்கள் ஆற்றியுள்ள பணிகளை நாம் மறந்து விடவோ, மறைக்கவோ முடியாது.

penang-waterfall-temple இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் பினாங்கு தண்ணீர்மலை ஆலயம்…

குறிப்பாக, ஆலயம் தொடர்பான பண விவகாரங்களில் அவர்களின் நேர்மையும், தூய்மையும் குறித்து இதுவரை யாரும் கேள்வி எழுப்பி, கறைபூசியதில்லை. ஓரிரு தனிநபர் சம்பவங்கள் இருந்திருக்கலாமே தவிர ஒட்டுமொத்த நகரத்தார் சமூகத்தின் மீதே கறைபூசுவதும் நியாயமில்லை.

இன்று பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தங்களிடம் இருக்கும் நிதி வளத்தால், இலட்சக்கணக்கில் செலவழித்து தங்க இரதத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால் 180 ஆண்டுகளாக இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்தவர்கள் நகரத்தார்கள் என்பதையும் நாம் ஒரே நொடியில் மறந்து, புறந்தள்ளி, பேசுவது அழகல்ல!

பல நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த நகரத்தார்களின் அப்பழுக்கற்ற சமயப் பண்புகளையும், நடைமுறைகளையும், கலாச்சாரப் பின்னணிகளையும், இந்த இரட்டை இரதப் பிரச்சனைகளுக்காக கேலிகள், கிண்டல்கள் செய்வதும், அவர்களின் கணக்குகளையும், நிதி தொடர்பிலான நேர்மைகள் குறித்து கேள்வி எழுப்புவதும் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றதாகத் தெரியவில்லை.

மலேசியாவில் மட்டுமின்றி, உலகம் எங்கிலும், இந்தியாவிலும் கூட நகரத்தார்களின் சமய மற்றும் ஆலயங்கள் தொடர்பான பங்களிப்புகள் எண்ணிலடங்காதவை!

எந்த இரதம் முதலில் புறப்பட வேண்டும்?

எனவே, இப்போது எந்த இரதம் முதலில் புறப்படுவது – வெள்ளி இரதமா, தங்க இரதமா – என்ற பிரச்சனையில்,

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளி இரதத்திற்கு மரியாதை செலுத்தி, அதன் பாரம்பரியத்திற்கு மதிப்பும் கௌரவம் கொடுக்கும் வகையில்,

இத்தனை ஆண்டுகளாக அந்த வெள்ளி இரதம் ஒன்றுதான், நமது பினாங்கு தைப்பூசப் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டும் வண்ணம் வீதிகளில் உலா வந்தது என்பதையும் கவனத்தில் கொண்டு,

முதலில் வெள்ளி இரதம் ஊர்வலமாகப் புறப்படுவதுதான் முறையாக இருக்கும் என்பதே பரவலான கருத்து.

புதிய இரதம் என்பதற்காக – இந்த ஆண்டுதான் முதல்  ஊர்வலம் என்பதற்காக – அல்லது தங்கம் என்பதற்காக – தங்க இரதத்தில் இருக்கும் முருகன்தான் முதலில் புறப்பட வேண்டும் என்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமில்லை!

நமது இந்து சமயம்கூட ஓர் ஆலயத்தில் கருங்கல்லால் செய்யப்பட்ட சிலையைத்தான் கடவுளாக ஆராதிக்கின்றதே தவிர – இதுவரை தங்கத்திற்கு மாறியதில்லை – அந்த ஆலயத்தில் ஆயிரம் கோடிகள் பணமிருந்தாலும்!

-இரா.முத்தரசன்