Home நாடு பினாங்கு இந்து அறப்பணி வாரியம்: தலைவராக ஜக்டீப் சிங்? ஜசெக முடிவு செய்யும்! லிங்கேஸ்வரன் அறிவிப்பு!

பினாங்கு இந்து அறப்பணி வாரியம்: தலைவராக ஜக்டீப் சிங்? ஜசெக முடிவு செய்யும்! லிங்கேஸ்வரன் அறிவிப்பு!

89
0
SHARE
Ad
ஜக்டீப் சிங் டியோ

ஜோர்ஜ் டவுன்: எதிர்வரும் ஜூலை மாதத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கான ஆணையர்கள் நியமனங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த அமைப்பின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் அருணாசலம் கருத்து தெரிவித்துள்ளார். அறப்பணி வாரியத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயரும் தானும் மறு நியமனம் செய்யப்படுவது ஜசெக தலைமைத்துவத்தின் கையில் இருக்கிறது என லிங்கேஸ்வரன் கூறியுள்ளார்.

“நான் இதை முழுமையாக கட்சி தலைமையின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.  ஜூலை மாதம் எனது பதவி தொடர வேண்டுமா என்பதைக் கட்சி தீர்மானிக்கட்டும்,” என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ராயர் பிரி மலேசியா டுடே இணைய ஊடகத்திற்குத் தெரிவித்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரும் செனட்டருமான லிங்கேஸ்வரனும் இறுதியாக இந்த முடிவு கட்சியின் கையில் உள்ளது என்றார்.

#TamilSchoolmychoice

“ஜசெகவின் நம்பிக்கைக்குரிய உறுப்பினர்களாக, கட்சியின் தலைமையின் முடிவை நாம் மதிக்கிறோம். கட்சியின் கொள்கைகளின் அடிப்படையில்  சமூகத்தின் நலனுக்காக முயற்சி செய்வோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி பினாங்கு அரசு, குழு தலைமையை மாற்றத் திட்டமிட்டிருந்தால் அதனை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனக்குக் கிடைத்த தகவல்களின்படி பினாங்கு மாநில ஜசெக தலைவர் ஸ்டீவன் சிம்மின் கீழ் கட்சி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கான தலைவர்,  துணைத் தலைவர் இருவரையும் நீக்குவதை தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

தற்போது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இருக்கும் ராயர், அண்மையில் நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் 30 பேர் கொண்ட மத்திய செயற்குழுவிற்கு வெற்றிபெறத் தவறினார்

இதற்கிடையில் துணை முதல்வர் ஜக்டீப் சிங் தேவையானால் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கான தலைமையை ஏற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை உருவாக்கிய 1906 சட்டம் சீக்கிய மதத்தினரையும் இந்துக்கள் பிரிவில் சட்டபூர்வமாக இணைத்தது. எனினும், சீக்கியர் ஒருவர் எப்படி இந்து அறப்பணி வாரியத் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும் என்ற கண்டனங்களும் எழுந்துள்ளன.

ஜசெக மூலமாக இந்தியர்களுக்கு கிடைக்கும் எந்தப் பதவியாக இருந்தாலும், அது கர்ப்பால் சிங் குடும்பத்தினருக்கு மட்டுமே கிடைத்து வருவது ஜசெக வட்டாரத்தில் இந்தியர்களிடையே குறிப்பாக தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது இந்து அறப்பணி வாரியத் தலைவர் பதவிக்கும் பெரும்பாலான இந்து தமிழர்களைப் புறக்கணித்து விட்டு மீண்டும் கர்ப்பால் சிங் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே மீண்டும் அந்தப் பதவியைக் குறிவைத்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.