புத்ரா ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (13 மே) தொடங்கி ரஷியாவுக்கு 3-நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார். ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பினை ஏற்று அன்வார் இந்த வருகையை மேற்கொள்கிறார்.
பிரதமருடன் செல்லும் குழுவில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரனும் இடம் பெற்றுள்ளார்.
வியாழக்கிழமை வரை மாஸ்கோ வருகையை மேற்கொள்ளும் பிரதமர், அதன் பின்னர் வெள்ளிக்கிழமை வரை, ரஷியாவின் டாட்டார்ஸ்தான் குடியரசின் தலைநகர் காசானுக்கு வருகை தருவார்.
மாஸ்கோவில் ரஷிய அரசாங்கத்தின் அனைத்துலக கல்விக் கழகம் நடத்தும் நிகழ்ச்சியில் உரையாற்றுவதோடு, அதிபர் புடின், அரசாங்க அதிகாரிகள், ரஷிய வணிகப் பிரமுகர்கள் ஆகியோருடன் சந்திப்புகளும் நடத்துவார். ரஷியாவில் வாழும் மலேசியர்களையும் அவர் சந்திப்பார்.
காசான் நகரில் நடைபெறும் 16-வது அனைத்துலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பிரதமர் உரையொன்றையும் நிகழ்த்துவார். டாட்டர்சான் குடியரசின் தலைவர் ரஸ்தான் மின்னிகானோவ் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுடன் அன்வார் சந்திப்புகள் நடத்துவார் என பிரதமரின் ஊடகச் செயலாளர் அறிவித்துள்ளார்.