
கோலாலம்பூர்:சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் சாம்ரி வினோத்துடன் விவாதம் செய்யத் தயார் என சவால் விடுத்திருந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அந்த முடிவை மாற்றிக் கொண்டதற்காக இந்திய சமுதாயத்தில் இருந்தும் அரசாங்கத்தில் இருந்தும் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
பல சமூகத் தலைவர்கள், நெறியின்றி பேசும் சாம்ரி வினோத்துடன் விவாதம் செய்துதான் நமது இந்து சமயத்தின் பழம் பெருமையை நிலைநாட்ட வேண்டிய அவசியம் இல்லை எனக் கருத்து தெரிவித்தனர். இந்த விவாதம் தேவையற்றது, சாம்ரியைத்தான் மேலும் பிரபலமாக்கும் என சிலர் கருதுகின்றனர்.
ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் சரவணனின் முடிவை வரவேற்றுள்ளார். இதுபோன்ற விவாதங்கள் ஒற்றுமையை மேலும் குலைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒற்றுமைத் துறை அமைச்சரின் வேண்டுகோள், காவல் துறையின் ஆலோசனை, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் கருத்துப் பரிமாற்றம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இந்த விவாதத்தில் ஈடுபடுவதில்லை என முடிவெடுத்திருப்பதாக சரவணன் கூறியிருக்கிறார்.
காவல் துறை இன்னும் மௌனமாக இருக்கிறது – அவர்கள் நடவடிக்கையே எடுக்க முன்வரவில்லை – சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் – அதற்கு பதிலாக சாம்ரியுடன் வீண் விவாதம் எதற்கு என பினாங்கு மாநில முன்னாள் முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறியுள்ளார்.
சாம்ரி வினோத்துக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்திருக்கும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயரும் இதே தொனியிலான அறிக்கையை விடுத்திருக்கிறார்.
இதற்கிடையில் சாம்ரியின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்துகள் தொடர்பில் மலேசிய தொடர்பு, பல்ஊடக ஆணையம் (MCMC) மார்ச் 5 அன்று சாம்ரி வினோத்தின் அந்த முகநூல் பதிவை நீக்குமாறு மேட்டா (Meta) என்னும் பேஸ்புக் உரிமையாளரான நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் காவல் துறையும் சாம்ரி வினோத் மீதான விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது. “காவல்துறை, சாம்ரியின் பேஸ்புக் பதிவை உருவாக்க பயன்படுத்தப்பட்ட சாதனத்தை பறிமுதல் செய்துள்ளது, மேலும் விசாரணையை எளிதாக்க தொழில்நுட்ப உதவி வழங்கியுள்ளது” என்றும் எம்சிஎம்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.