Home Video சயாம்-பர்மா மரண ரயில்வே 80 ஆண்டுகள் நிறைவு – நினைவுப் பயணம்

சயாம்-பர்மா மரண ரயில்வே 80 ஆண்டுகள் நிறைவு – நினைவுப் பயணம்

61
0
SHARE
Ad

*உயிர் நீத்தவர்களின் நினைவு பிரார்த்தனைக்காக ஒரு சிறப்புப் பயணம்

கோலாலம்பூர்: இரண்டாம் உலகப் போர் சமயத்தில், சயாம் பர்மா மரண ரயில்வே நிர்மாணிப்புப் பணியில்  ஈடுபடுத்தப்பட்ட மலாயா-சிங்கப்பூர் தமிழர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஜப்பானிய இராணுவத்தின் கொடுமைகளுக்கு ஆளாகி நிர்மாணிப்புப் பகுதியில், அதே மண்ணுக்கு அவர்கள் இரையான துயர வரலாற்றை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த துர்மரண சம்பவங்கள் நடந்து இந்த ஆண்டோடு 80 வருடங்கள் உருண்டோடி விட்டாலும் அன்று நம் முன்னோர்கள் அடைந்த இன்னல்களும் அவர்கள் செய்த உயிர்த் தியாகமும் இன்றும் நம் மனதை இரணமாக்கக் கூடியவை.

மலேசியாவில் இயங்கும் மரண ரயில் ஆர்வலர் சங்கம் இந்த ஆண்டும்  தாய்லாந்திலுள்ள காஞ்சனாபுரிக்கு ஒரு நினைவுப் பயணத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் முறையான பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. அது மட்டுமல்லாது, மரண ரயில் அமைந்துள்ள பர்மா (மியன்மார்) எல்லை வரை சென்று வரவும் வரலாற்றுச் சுவடுகள் பதிந்துள்ள பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மரண ரயில் ஆர்வலர் சங்கத்தின் தலைவர் திரு,சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மரண ரயில் பணியில் மரித்துப் போன நம்மவர்களின் தியாகத்துக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில், காஞ்சனாபுரியில் உள்ள ஒரு கல்லறையின் நுழைவாசல் கல்லில் அவர்கள் வரலாற்றை தமிழில் பதிக்கும் பணியை இச்சங்கம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. அங்கு நடந்த இதன் திறப்பு விழாவில் மலேசியாவிலிருந்து சென்ற பலர் கலந்துக் கொண்டனர்.

இம்முறை இந்த நினைவுப் பயணம் எதிர்வரும் 30.05.2025 முதல் 05.06.2025 வரை மொத்தம் 7 நாட்களை உள்ளடக்கியதாக இருக்கும். கோலாலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் வழிப் பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம் நாடு திரும்ப  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சயாம்-பர்மா மரண ரயில் நிர்மாணிப்பில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களும்  ஆர்வம் உள்ள அனைவரும் இந்த நினைவுப் பயணத்தில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றார்கள். மரண ரயில் ஆர்வலர் சங்கம்   ஏற்பாடு செய்துள்ள பயணத்தில் கலந்து கொள்பவர்கள் ரிங்கிட் 1,750 செலுத்த வேண்டும். ரயில் மற்றும் விமான டிக்கட், ஹோட்டல் தங்கும் வசதி, சுற்றுலா பேருந்து வசதி ஆகியவை இந்தக் கட்டணத்தில் அடங்கும். கடைசி நாள் பேங்காக்கில் தங்கும்படி பயணம் அமைக்கப்பட்டுள்ளது.

உணவு, கூடுதல் பயணப் பெட்டிகளுக்கு (பேக்கேஜ்) விதிக்கப்படும் கட்டணம் பயணிகளின் சொந்த செலவில் அடங்கும். அப்படி யாரேனும் தனிப்பட்ட முறையில் பயண ஏற்பாடு செய்து சொந்தமாக வர விரும்பினால், தாராளமாக வந்து 01.06.2025 இல் காஞ்சனாபுரியில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துக் கொள்ளலாம்.

மேல் விபரங்கள் பெற ; சந்திரசேகரன் (017-888 7221) / கௌரி  (012 6723 635) ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

இத்தகைய நினைவுப் பயணம் முதன் முதலில் 20 பிப்ரவரி 2018-இல் நடத்தப்பட்டு அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 30 மே 2025-ஆம் நாள், காலை 8.00 மணிக்கு கோலாலம்பூர் பழைய ரயில்வே நிலையத்தின் 1-வது பயணிகள் முகப்பிட மேடையிலிருந்து இந்தப் பயணத்தில் கலந்து கொள்பவர்கள் புறப்படுவார்கள். அவர்களை வழியனுப்ப விரும்புபவர்களும் இந்த வழியனுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

கோலாலம்பூரிலிருந்து நேரடியாக தாய்லாந்து எல்லையிலுள்ள பாடாங் பெசார் நகருக்கான இரயில் சேவைகளுக்கான கட்டணச் சீட்டுகள் விற்று முடிந்து விட்டதால், கோலாலம்பூரிலிருந்து புக்கிட் மெர்தாஜாம் (பினாங்கு) சென்று, அங்கிருந்து பயணிகள் ரயில் மூலம் பாடாங் பெசார் சென்றடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சிறிய எண்ணிக்கையிலான கட்டணச் சீட்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த நினைவுப் பயணத்தின்போது பதிவு செய்யப்பட்ட சயாம்-பர்மா பயணத்தின் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: