கோலாலம்பூர் – மலேசியர்களின் வரலாற்றில் குறிப்பாக இந்தியர்களின் வாழ்க்கைப் பாதையில் என்றுமே நினைவுகூரப்படும் அளவுக்கு பல சோக சம்பங்களை உள்ளடக்கிய பதிவாக ஆழப் பதிந்து விட்ட அழியாத சித்திரம் சயாம்-பர்மா மரண இரயில்வே.
இந்த வரலாற்றுப் பதிவு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆர்வலர்கள் குழு ஒன்று, தற்போது சயாம்-பர்மா மரண இரயில்வே நோக்கி, இரயில் மூலம் புனித நினைவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. சயாம் மரண இரயில்வே நிர்மாணிக்கப்பட்டபோது, அங்கு சென்று உயிருடன் திரும்பிய சிலரும், அவர்களின் குடும்பத்தினரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆர்வம் கொண்டுள்ள சிலரும் இந்தப் பயணத்தில் உடன் சென்றிருக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயணம் எதிர்வரும் 26-ஆம் தேதியோடு நிறைவு பெறும்.
இந்தப் பயணக் குழுவுக்குத் தலைமை தாங்குவதோடு, பயண ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் இந்தப் பணியில் நீண்ட காலமாக ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கும் சந்திரசேகரன்.
சயாம் மரண இரயில்வேயின் 75 ஆண்டு கால வரலாற்றில் இத்தகையப் பயணம் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன் முறையாகும்.
கோலாலம்பூர் பழைய இரயில்வே நிலையத்திலிருந்து தொடங்கிய பயணம்
சயாம் மரண இரயில்வே நோக்கிய பயணம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி கோலாலம்பூரிலுள்ள பழைய இரயில்வே நிலையத்தில் இருந்து தொடங்கியது. இங்கிருந்துதான் சயாம் மரண இரயில்வே நோக்கி ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் மக்கள் பான் போங் என்ற தாய்லாந்து நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
இந்தப் பயணக் குழுவில் இடம்பெற்றுள்ள 20 பேர்களில் சயாம் மரண இரயில்வே சம்பவத்தில் ஜப்பானிய இராணுவத்திற்கு மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றிய 91 வயது ஆறுமுகம் கந்தசாமி, மற்றும் சயாம் மரண இரயில்வே இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 84 வயது பொன்னம்பலம் வீச்சன் ஆகியோரும் அடங்குவர்.
இவர்களில் பொன்னம்பலம், 8 வயதாக இருக்கும்போது அவரது தந்தையாரோடு சயாம் மரண இரயில்வே இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டவராவார். இதே கோலாலம்பூர் பழைய இரயில்வே நிலையத்திலிருந்துதான் பொன்னம்பலம் 1943-ஆம் ஆண்டில், தனது தந்தையாரோடும், இன்னும் நூற்றுக்கணக்கான பேர்களோடும் சயாம் மரண இரயில்வே நோக்கி – பான் போங் (Ban Pong) என்ற தாய்லாந்து நகர் நோக்கிப் புறப்பட்டார் என்பது இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.
சயாம் மரண இரயில்வே தொடர்புடைய பல சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டுவிட்டு, பின்னர் பேருந்து மூலம் மியன்மார் (பர்மா) எல்லைவரை இந்தப் பயணக் குழு செல்லவிருக்கிறது. தங்களின் பயணத்தின்போது மரண இரயில்வேயின் முழுமையான இரயில் தடத்தில் இந்தப் பயணக் குழு தனது பயணத்தை மேற்கொள்கிறது.
இந்தப் பயணத்திற்கு தாய்லாந்து தமிழ் சங்கமும், தாய்லாந்து தமிழ் முஸ்லீம் சங்கமும் ஆதரவும் ஒத்துழைப்பும் தந்திருக்கின்றன. பயணக் குழுவுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (25 பிப்ரவரி 2018) இரவு தாய்லாந்து தமிழ் சங்கம் விருந்துபசரிப்பு வழங்கி கௌரவிக்கிறது. இந்தப் பயணத்தை முழுமையாகப் காணொளி வடிவில் படம் எடுக்கவும் தாய்லாந்து தமிழ்ச் சங்கம் உதவியுள்ளது.
தாய்லாந்து தமிழ் முஸ்லீம் சங்கம், இந்த பயணம் முழுவதற்கும் உதவி புரிய ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்திருப்பதோடு, ஒரு பயண வழிகாட்டியையும் ஏற்பாடு செய்திருக்கிறது.
அதே வேளையில், பயணக் குழு தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றடையும்போது, அங்கு இந்திய வம்சாவளியினரையும், இந்திய இயக்கங்களையும் சந்திக்க தாய்லாந்து இந்து சமாஜம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. விருந்துபசரிப்புகளையும் வழங்குகிறது.
இந்தப் பயணத்தைத் தொடர்ந்து சயாம் மரண இரயில்வே சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை சம்பவம் நடந்த இடத்திலேயே நிர்மாணிக்க சயாம் மரண இரயில்வே ஆர்வலர் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சயாம் மரண இரயில்வே குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கண்காட்சி மையம் ஒன்றை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
DEATH RAILWAY INTEREST GROUP (DRIG)
Suite 10-10, Sentral Vista, 150, Jalan Sultan Abdul Samad, Brickfields, 50470 Kuala Lumpur, Malaysia.
Tel: 0178887221 Email: deathrailwayinterestgroup@gmail.com
https://www.facebook.com/deathrailwayinterestgroup/
Contact : P.Chandrasekaran – +6017-8887221