கோலாலம்பூர் – கண்ணதாசன் அறவாரியமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்தும் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை தனது துணைவியாருடன் கோலாலம்பூர் வந்தடைந்தார்.
அவரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரும், கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும் இணைந்து வரவேற்றனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை (25 பிப்ரவரி 2018) காலை முதல் மாலைவரை தலைநகர் ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள கோலாலம்பூர் மாநகரசபை மண்டபத்தில் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் சிறப்பு வருகை புரிவார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், இந்திய சமுதாயத்திற்காகவும் பல்முனைகளிலும் சிறப்பாகச் சேவைகள் வழங்கிய 10 பிரமுகர்கள் சிறப்பிக்கப்படவுள்ளனர்.