Home நாடு ஐஎன்ஏ – இந்திய தேசிய இராணுவ தியாகிகளுக்கான 80-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி

ஐஎன்ஏ – இந்திய தேசிய இராணுவ தியாகிகளுக்கான 80-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி

502
0
SHARE
Ad

மலாயாவிலிருந்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய ஐஎன்ஏ (INA) இந்திய தேசிய இராணுவ தியாகிகளுக்கான 80-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி

தேதி: ஜூலை 7, 2024

நேரம்: காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை

பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

#TamilSchoolmychoice

இடம்: 13-12 விஸ்தா சென்ட்ரல், பிரிக்ஃபீல்ட்ஸ், கோலாலம்பூர்.

நேரில் கலந்து கொள்ளக்கூடியவர்களுடன் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியாவிலிருந்து ஆன்லைன் பங்கேற்பாளர்களும் இணைந்த  ஒரு கலவை நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னணி தகவல்:

குமரன் நாயர் மற்றும் ராமு தேவர் மலாயாவில் உளவாளிகளாக பயிற்சி பெற்று, இந்தியாவின் சில பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு 1944 ஜூலை 7 அன்று இரகசியமாக தூக்கிலிடப்பட்டனர்.

எந்தவொரு வழக்கமான ராணுவத்தைப் போலவே, மலாயாவின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு உருவான இந்திய தேசிய ராணுவம் (INA) எதிரி எல்லைகளுக்கு அப்பால் செயல்படும் தனது சொந்த ரகசிய சேவையைக் கொண்டிருந்தது.

பினாங்கு ஃபிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் உளவுத்துறை மற்றும் பிரச்சாரத்தில் பயிற்சி பெற்ற இளம் ஐஎன்ஏ பட்டாள வீரர் ஹர்பக் சிங், ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, அங்கு கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் தூக்கிலிடப்படுவதிலிருந்து தப்பித்து, மலாயாவுக்குத் திரும்பி வந்து தனது கதையைச் சொல்லி வாழ்ந்தார். பரபரப்பான நாடகம் போன்ற தன்மை வாய்ந்த அவரின் கதை 1995 இல் கோலாலம்பூரில் நேதாஜி மையம் வெளியிட்ட INA பற்றிய புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாமல், மலாயாவிலிருந்து எண்ணற்றோர் ரகசியமாக விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

அதே சமயத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த சயாம்-பர்மா மரண ரயில் பாதை பற்றிய ஆராய்ச்சியின் போது பின்வரும் தகவலை நாங்கள் கண்டறிந்தோம். இந்த ரயில் பாதை ஐஎன்ஏ மற்றும் ஜப்பானிய படைகளை பர்மாவுக்கும் அதன் பிறகு இந்திய எல்லைக்கும் அனுப்ப பயன்படுத்தப்பட்டது.

முழு செயல்பாடும் ரகசியமாக செய்யப்பட்டதால், சிங்கப்பூரில் நேதாஜி வருவதற்கு முன்பே, 1942 முதல் ஜப்பானியர்கள் மலாயாவிலிருந்து ஐஎன்ஏ-யில் சேர்ந்த பொதுமக்களுக்கு இந்தியாவில் உளவு பார்ப்பதற்காகவும் பிரச்சாரத்திற்காகவும் பயிற்சி அளித்தனர் என்பது ஐஎன்ஏ வட்டாரங்களிலும் கூட பெரும்பாலும் அறியப்படவில்லை.

அவர்களில் பலர் இடைமறிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, எதிரி முகவர்களாக ரகசியமாக விசாரிக்கப்பட்டனர்.

இந்தியாவிலோ மலாயாவிலோ யாருக்கும் தெரியாமல் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

இந்தியாவின் மெட்ராஸ் மாகாணத்தில் மட்டும் நடந்த 22 தூக்குத் தண்டனைகளில், 2 பேர் 1944 ஜூலை 7 அன்று தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் குமரன் நாயர் மற்றும் அப்போது 18 வயதாக இருந்த ராமு தேவர் ஆவார்கள்.

தமிழில் தனது புத்தகத்தில் அவர்களின் தியாகங்களை ஆவணப்படுத்திய சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் அண்ணாமலைக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

எங்கள் சந்திப்புக்குச் சிறிது காலத்திற்குப் பிறகு, 2013 இல் எங்களின் முதல் நினைவு நிகழ்ச்சியையும், மீண்டும் 2014 ஜூலை 7 அன்று 70வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியையும் கோலாலம்பூரில் நடத்தினோம். எங்களுக்குத் தெரிந்தவரையில் மலேசியாவில் இது போன்ற வேறு எந்த நிகழ்ச்சிகளும்  நடத்தப்படவில்லை.

ஒரு ஆன்லைன் செய்தியை அமெரிக்காவில் குடியேறியுள்ள குமரன் நாயரின் பேரன் கவனித்துள்ளார்.

விஜய் பாலகிருஷ்ணன் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இந்த சம்பவம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

அவர் ஜூலை 7 அன்று இந்தியாவின் மைசூரில் தனது புத்தகமான ‘தி ஸ்வராஜ் ஸ்பை’ ஐ விளம்பரப்படுத்த இருக்கிறார். ஆய்வின் மூலம் கண்டறிந்த தனது கண்டுபிடிப்புகளை எங்களுடன் ஆன்லைனில் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

இது போன்ற கதைகளை ஆராய்ந்து, ஆவணப்படுத்தி, பிரசுரிக்கவும், அவர்களை துரோகிகள் என்று பதிவில் உள்ளபடி அல்லாமல் தேசபக்தர்களாக அங்கீகரிக்கவும் நமக்கு ஒரு கூட்டுப் பொறுப்பு உள்ளது.

உங்கள் அன்பான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

பி. சந்திரசேகரன்
மலேசிய மரண ரயில் ஆர்வலர் குழு
+6017888722/0+6012 6723635