கோலாலம்பூர் : உலகின் முன்னணி நிதி ஊடகமான ஃபோர்ப்ஸ், மலேசியாவில் முதல் 50 பணக்காரர்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் மலேசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக ரோபர்ட் குவோக் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக இந்த முதல் நிலையை அவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவரின் சொத்து மதிப்பு 11.5 அமெரிக்க டாலராக (55 பில்லியன் மலேசிய ரிங்கிட்) மதிப்பிடப்பட்டுள்ளது.
குவோக் குரூப் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர் ரோபர்ட் குவோக். அந்த நிறுவனம் தங்கும் விடுதிகள், நில, கட்டட சொத்துகள் மூலப் பொருட்கள் ஆகியவை தொடர்பான நிறுவனங்களில் பங்குடமைகளைக் கொண்டிருக்கிறது.
1971-இல் சிங்கப்பூரில் அவரால் தொடங்கப்பட்ட ஷங்ரிலா தங்கும் விடுதிகள் உலகமெங்கும் பரவி அனைத்துலக தரத்திலான தங்கும் விடுதிகளாகத் திகழ்கின்றன.
ரோபர்ட் குவோக்கின் நெருங்கிய உறவினரான குவோக் கூன் என்பவர் வில்மார் இண்டர்நேஷனல் என்னும் நிறுவனத்தை நடத்துகிறார். அதிலும் கணிசமான பங்குடமையை ரோபர்ட் குவோக் கொண்டிருக்கிறார்.
ரோபர்ட் குவோக் ஆக இளைய மகன் குவோக் கூன் ஹூவா ஹாங்காங்கில் உள்ள கேரி புரோபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியும் ஆவார்.
பெரும்பாலும் ஹாங்காங்கில் தங்கியிருந்தாலும் ரோபர்ட் குவோக் மலேசியராவார். கடந்த ஆண்டு (2023) அக்டோபரில் அவர் தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். 8 பிள்ளைகளைக் கொண்ட அவர் சிங்கப்பூரின் ராபிள்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்.
1949-ஆம் ஆண்டில் அரிசி, சீனி, கோதுமை போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் அவர் ஈடுபடத் தொடங்கினார்.
இதற்கிடையில் முதல் 50 மலேசியப் பணக்காரர்களின் மொத்த சொத்துடமையை 83.4 பில்லியன் அமெரிக்க டாலராக (399.5 பில்லியன் ரிங்கிட்) ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது 2 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலராக (376.2 பில்லியன் ரிங்கிட்) இருந்தது.
மலேசியாவின் ரிங்கிட் நாணய மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்து வரும் நிலையிலும் மலேசியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குவோக்கிற்கு அடுத்த நிலையில் 2-வது பெரிய பணக்காரராக குவெக் லெங் சான் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். மலேசியாவின் பிரபல வங்கியான ஹோங் லியோங் குழுமத்தின் நிர்வாகத் தலைவரான அவர் 8.8 பில்லியன் அமெரிக்க டாலர் (42.1 பில்லியன் ரிங்கிட்) சொத்துடமையைக் கொண்டுள்ளார்.