
சிங்கப்பூர் : நீண்ட காலத்திற்குப் பின்னர் சிங்கப்பூர் புதிய பிரதமரைக் காணவிருக்கிறது. எதிர்வரும் மே 15-ஆம் தேதி நடப்பு பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகி அவருக்குப் பதிலாக, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பதவியேற்கிறார்.
அவரின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் சிங்கப்பூரின் அரசியல் பாதை மாறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிஏபி என்னும் மக்கள் செயல் கட்சிதான் சிங்கப்பூரை ஆரம்பம் முதல் ஆண்டு வருகிறது.

மே 15-ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு சிங்கையின் 4-வது பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் லாரன்ஸ் வோங் 13 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலில் நுழைந்தவராவார். அவருக்கு வயது 51.
லீ சியன் லூங் புதிய தலைமைத்துவத்தை 4-ஜி தலைமைத்துவம் என வர்ணித்துள்ளார். கோவிட் பிரச்சனையின் போது இந்த அணி மிகத் திறமையாக நிலைமையைக் கையாண்டது என அவர் கூறினார்.
லாரன்ஸ் வோங் நடப்பு நிதியமைச்சாராகவும் பணியாற்றுகிறார். அண்மையில் நடப்பு அமைச்சர்களிடையே எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 19 அமைச்சர்களில் 15 பேர் லாரன்ஸ் வோங் அடுத்த பிரதமராக ஆதரவு தெரிவித்தனர்.
72 வயதான லீ கடந்த 20 ஆண்டுகளாக பிரதமராக சிங்கப்பூரை வழிநடத்தினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக அதிகாரத்தை அடுத்த தலைமுறைத் தலைவரிடம் ஒப்படைப்பேன் என லீ 2023-இல் அறிவித்தார்.
2025-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கான அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.