
சிங்கப்பூர்: நேற்று சனிக்கிழமை (மே 3) நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டபடியே சிங்கப்பூரியர்கள் 65.57விழுக்காட்டு வாக்குகளை வழங்கி மீண்டும் மக்கள் செயல்கட்சி, பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் ஆட்சியைத் தொடர ஆதரவளித்துள்ளனர்.
நேற்றிரவு 8.00 மணிக்கு வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டபோது 2,429,281 வாக்குகள் செலுத்தப்பட்டிருந்தன. 2,627,026 பதிவு பெற்ற சிங்கப்பூர் வாக்காளர்களில் 92.47 விழுக்காட்டினர் தங்களின் வாக்குகளைச் செலுத்தியிருந்தனர். இந்த வாக்குகளில் 42,829 செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
பிஏபி கட்சி வெற்றி பெற்றாலும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. செங்காங், ஹவுகாங் ஆகிய தொகுதிகளிலும் தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றியைப் பதிவு செய்தது. எனினும் போட்டியிட்ட மற்ற தொகுதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அக்கட்சி காணவில்லை. பல தொகுதிகளில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு கடுமையானப் போட்டியை தொழிலாளர் கட்சி வழங்கியது.
மற்ற எதிர்க்கட்சிகள் எதுவும் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மாறுபட்ட குரல்கள் ஒலிக்க வேண்டும் என சிங்கப்பூர் வாக்காளர்கள் பிரச்சாரங்களின்போது தன்னிடம் தெரிவித்ததாகக் கூறிய பிரதமர் லாரன்ஸ் வோங், அத்தகைய மாற்று கருத்துகளுக்குத் தான் மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார். அதே வேளையில் ஒரு வலிமையான அரசாங்கம் அமைய வேண்டியதன் அவசியத்தையும் வோங் வலியுறுத்தினார்.
மக்கள் செயல் கட்சி வெற்றி அறிவிக்கப்பட்டதும் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வோங் வாழ்க்கைச் செலவினங்கள் உயர்வு, வீட்டு வசதி போன்ற அம்சங்களில் சிங்கப்பூர் மக்களின் அதிருப்திகளை கவனத்தில் கொள்வதாகவும், இந்த அம்சங்களில் தங்களின் பணிகளை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் முடிந்து விட்டதால், இனி கருத்து வேறுபாடுகளை மறந்து சிங்கப்பூரியர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் லாரன்ஸ் வோங் கேட்டுக் கொண்டார்.