(அனைத்துலக வணிக இதழான போர்ப்ஸ் மலேசியாவின் 50 பணக்காரர்களைப் பட்டியலிடும்போது, 13-வது பணக்காரராக டான்ஸ்ரீ ஜி.ஞானலிங்கத்தைப் பெயர் குறிப்பிட்டது. ஒரு சாதாரண சந்தை விற்பனைத் துறை அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் நிறுவன நிர்வாகியாகவும், இயக்குநராகவும், பின்னர் வணிகத்திலும் ஈடுபட்டு இந்த நிலையை அடைந்தார். அவரின் அந்தப் பயணம் குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
* விற்பனை சந்தை, விளம்பரத் துறையில் குருவாகக் கருதப்பட்டவர்
* எந்த ஓர் இந்தியனும் இந்த நாட்டில் முன்னேறலாம் என்பதை நிரூபித்தவர்.
* கால்பந்து போட்டிகள் நேரலையாக நமது தொலைக்காட்சிகளில் ஒளியேற அன்றே வழிவகுத்தவர்
*நீண்ட கால இழுபறியான மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர்
இன்று உலகின் எந்த மூலையில் கால்பந்து விளையாட்டுகளும் மற்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றாலும் அவை நமது தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன. நாமும் கண்டு களிக்கிறோம். ஆனால் 1980ஆம் ஆண்டுகளில் மலேசியர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் அமையவில்லை. முதன் முதலில் நமது தொலைக்காட்சி அலைவரிசைகளில் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட திட்டமிட்டு வழிவகுத்துத் தந்தவர் டான்ஸ்ரீ ஞானலிங்கம் என்பது பலருக்குத் தெரியாத ரகசியம்.
கடந்த ஜூலை 11-ஆம் ஆம் தேதி அவர் காலமானார். ஒரு நிறுவனத்தின் சந்தைத்துறை அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் அதே நிறுவனத்தில் நிர்வாகியாகவும், இயக்குநராகவும் உயர்ந்தார். பிற்காலத்தில் நாட்டின் 50 பணக்காரர்களுள் ஒருவராக பெயர் குறிப்பிடப்பட்டார். நாட்டின் 13ஆவது பெரிய பணக்காரராக போர்ப்ஸ் (Forbes) வணிக சஞ்சிகையால் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டார்.
1.45 பில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துகளை அவர் அதிகாரபூர்வமாகக் கொண்டிருந்தார் என்பது போர்ப்ஸ் சஞ்சிகையின் மதிப்பீடு. ரிங்கிட் மதிப்பில் சுமார் 6,600 மில்லியன். இந்த நாட்டில், முறையான வாய்ப்புகள் அமைந்தால் – கடுமையாக உழைத்தால் – உயர்ந்த நிலைக்கு எந்த இந்தியனும் வரலாம் என்பதன் உதாரணமாகத் திகழ்ந்தவர் ஞானலிங்கம்.
மலாயாப் பல்கலைக்கழகப் பட்டதாரி ஞானலிங்கம் – நினைவு கூர்கிறார் டத்தோ வீ.நடராஜன்
1965ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை மாணவராக நுழைந்தார் ஞானலிங்கம். அவருடன் பல்கலைக்கழகத்தில் ஒரே வகுப்பில் -ஒரே துறையில் – சக மாணவராகப் படித்தவர் வழக்கறிஞர் டத்தோ வீ.நடராஜன்.
“அரச மலேசிய ராணுவக் கல்லூரி மாணவராக இருந்தவர் ஞானலிங்கம். மிகச்சிறந்த மாணவர்கள்தாம் ஆர்எம்சி (Royal Military College) எனப்படும் அந்தக் கல்லூரிகளுக்கு இடைநிலைப்பள்ளிகளில் இருந்து அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் மிகச்சிறந்த மாணவராகத் திகழ்ந்ததால் மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய ராணுவக் கல்லூரியில் சேர்ந்து 1960 முதல் 1964 வரை இடைநிலைக் கல்வியை முடித்தார் ஞானலிங்கம். அதன்பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். வரலாற்றுத் துறை மாணவரான ஞானலிங்கமும் நானும் ஒரே துறையில் பயின்றதால் எங்களுக்கு இடையில் நெருக்கமான நட்பும் ஏற்பட்டது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் கழகத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் செயலாளராக நான் பணியாற்றினேன். பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் நான் சுங்கைப்பட்டாணிக்கு ஆசிரியராகப் பணிக்குத் திரும்பினேன். அவரோ விற்பனை சந்தைத் துறையில் (மார்க்கெட்டிங்) ஈடுபடும் நோக்கில் எம்டிசி என்னும் (Malaysian Tobacco Company) நிறுவனத்தில் 1968-இல் சேர்ந்தார்” என ஞானலிங்கம் குறித்த பல்கலைக் கழக நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடராஜன்.
படிப்படியாகத் தன் பணியில் வளர்ச்சி அடைந்த அவர் பின்னர் வணிகத்திலும் ஈடுபட்டு நாட்டின் பணக்காரர்களுள் ஒருவராக உயர்ந்தார். உயர்ந்த நிலையை அடைந்தாலும், தனது பழைய நண்பர்களை மறவாத குணமுடையவர். சில மாதங்களுக்கு முன்புகூட அவரைச் சந்திக்கச் சென்றபோது பிரபல தங்கு விடுதி ஒன்றில் மதிய உணவளித்து கலகலப்புடன் உரையாடினார் எனக் கூறினார் நடராஜன்.
பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு முடிந்ததும் அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் ஞானலிங்கம்.
விளம்பரத்துறையை மாற்றியமைத்த திறமையாளர்
1980களில் தொலைக்காட்சி விளம்பரங்களில் சிகரெட்டுகள் விளம்பரப்படுத்தப்பட்டன. டன்ஹில் எனப்படும் பிரபல சிகரெட்டை உற்பத்தி செய்த நிறுவனம் எம்டிசி. இன்று அந்த நிறுவனம் பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ – British American Tobacco – என பெயர் உருமாற்றம் கண்டு செயல்படுகிறது. அந்த நிறுவனத்தில் சந்தைத்துறையில் பணியாற்றிய ஞானலிங்கம் தனது திறமையாலும் உழைப்பாலும் கட்டங்கட்டமாக வளர்ச்சியடைந்து சந்தைத்துறையின் நிர்வாகியாகவும் பின்னர் அந்நிறுவனத்தின் விற்பனை சந்தைத்துறை இயக்குநராகவும் 1980-இல் நியமிக்கப்பட்டார்.
டன்ஹில் விளம்பரங்களின் மூலம் பல தமிழ்ப்படங்களும் அந்தக் காலத்தில் ஒளிபரப்பப்பட்டதை பலர் மறந்திருக்க மாட்டார்கள். அப்போது தனியார் தொலைக்காட்சிகள் இப்போதுபோல் இல்லை. ஆர்டிஎம் தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டும்தாம். அந்தக் காலகட்டத்தில் உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றபோது அதனை ஆர்டிஎம் வழி நேரலையாக ஒளிபரப்பும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் ஞானலிங்கம்.
அதற்கான பெரும்பான்மை விளம்பர செலவுகளை டன்ஹில் சிகரெட் உற்பத்தியாளரான எம்டிசி நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இவ்வாறாக விளையாட்டுப் போட்டிகள் நம் நாட்டில் நேரலையாக ஒளிபரப்பாகும் சூழலை ஏற்படுத்தி அதில் வணிக ரீதியாக வெற்றியும் பெற்றவர் ஞானலிங்கம்.
பிற்காலத்தில் சிகரெட் விளம்பரங்களும் மதுபான விளம்பரங்களும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் டிவி3, ஆஸ்ட்ரோ போன்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன. இன்று வணிக ரீதியாக விளையாட்டுப் போட்டிகள் நம் நாட்டில் ஒளிபரப்பாகின்றன. இதற்கு அன்றே அடித்தளம் அமைத்துத் தந்தவர் ஞானலிங்கம்.
எம்டிசி நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றிய பின் சொந்தமாக வணிகத்தில் ஈடுபட்டார் ஞானலிங்கம்.
“வணிகத்தில் ஞானலிங்கம் பெற்ற வெற்றிகள்” விவரிக்கிறார் டத்தோ சந்திரசேகர் சுப்பையா
விற்பனை சந்தைத்துறையில் சிறந்து விளங்கிய அவர், அந்த அறிவாற்றலை வணிகத்துறையிலும் பயன்படுத்தி வெற்றி கண்டார் என விவரிக்கிறார் அவருடன் நெருங்கிப் பழகிய மற்றோர் இந்திய வணிகப் பிரமுகரான டத்தோ சந்திரசேகர் சுப்பையா. ஞானலிங்கத்தின் நிறுவனம் ஒன்றில் இயக்குநராகவும் பணியாற்றியவர் சந்திரசேகர் சுப்பையா.
‘எம்டிசி நிறுவனத்தில் இருந்தபோது ஞானலிங்கத்திற்கும் அப்போதைய தகவல்துறை அமைச்சர் டத்தோ முகமட் ரஹ்மாட்டிற்கும் இடையில் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. ஆர்டிஎம் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அப்போது ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் ரிங்கிட் மட்டுமே வருமானமாகக் கிடைத்து வந்தது. அந்த விளம்பர வருமானத்தைப் பெருக்கிக் காட்டுவதாக முகமட் ரஹ்மாட்டிடம் தெரிவித்தார் ஞானலிங்கம். அப்போது ஆர்டிஎம் பெற்று வந்த வருமானத்தைத் தான் ஈட்டித் தருவதாகவும் கூடுதல் விளம்பர வருமானம் கிடைத்தால் அதை விழுக்காட்டு அடிப்படையில் ஆர்டிஎம்மும் தன் நிறுவனமும் பிரித்துக்கொள்வதாகவும் வணிக ஏற்பாடுகளை செய்துகொண்டார் ஞானலிங்கம்” என ஞானலிங்கத்தின் வணிக முயற்சிகளை விவரித்தார் சந்திரசேகர் சுப்பையா.
1988-ஆம் ஆண்டில் ஜி-டீம் கொன்சல்டன்ட்ஸ் (G-Team Consultants) என்னும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார் ஞானலிங்கம்.
“ஞானலிங்கத்தின் திறமையாலும் வியூகத்தாலும் ஆர்டிஎம் அமைப்புகளின் விளம்பர வருமானம் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து 300 மில்லியன் ரிங்கிட்டையும் தாண்டியது” என ஞானலிங்கத்தின் ஆற்றலைப் பெருமையுடன் நினைவு கூர்கிறார் சந்திரசேகர் சுப்பையா.
ஞானலிங்கத்துடன் ராணுவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர் (துன்) லிங் லியோங் சிக். பிற்காலத்தில் மசீச தலைவராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் அரசியலில் உயர்ந்தார் லிங். அவருடன் கொண்ட நட்பு காரணமாகத் தனது விளம்பர சந்தைத்துறை திறமைகளை வேறொரு கோணத்தில் செயல்படுத்த முனைந்தார் ஞானலிங்கம்.
உலகம் முழுவதும் உருமாற்றம் கண்டுவந்த கப்பல் போக்குவரத்துத்துறையில் ஈடுபட நினைத்த ஞானலிங்கம் புதிய துறைமுகம் ஒன்றை உருவாக்கவும் நிர்வகிக்கவும் அரசாங்கத்திடம் அனுமதி பெற்றார். அதுவே வெஸ்ட்போர்ட் எனப்படும் துறைமுகம். அஹ்மாயுடின் பின் அஹ்மாட் (Ahmayuddin bin Ahmad) என்பவருடன் இணைந்து 1994-இல் வெஸ்ட்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் என்னும் நிறுவனத்தை 1994ஆம் ஆண்டில் அமைத்தார். வெஸ்ட்போர்ட் துறைமுகத்தை நிர்வகிக்கும் உரிமத்தையும் அந்நிறுவனம் மூலம் அரசாங்கத்திடமிருந்து அவர் பெற்றார். 60 ஆண்டுகளுக்கான அந்த உரிமம் 2054ஆம் ஆண்டில் முடிவடையும்.
கொண்டெய்னர் (Container) எனப்படும் நவீன கொள்கலன்கள் மூலம் கப்பல் போக்குவரத்துகளை நவீனத் தொழில்நுட்ப முறையில் கையாண்டு வருகிறது வெஸ்ட்போர்ட்ஸ். இன்று நாட்டிலேயே மிக அதிகமான கொள்கலன்களைக் கையாளும் தனியார் துறைமுகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இவ்வாறு புதிய வணிக சூழலை உருவாக்கிய ஞானலிங்கம் அதன்மூலம் நாட்டின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக உயர்ந்தார். கடந்தாண்டு வெஸ்ட்போர்ஸ் நிறுவனம் 2.1 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியது.
பணக்காரராக உயர்ந்தாலும் பல சமூக சேவைகளை சத்தமின்றி, விளம்பரமின்றி செய்தவர் ஞானலிங்கம் எனவும் சந்திரசேகர் சுப்பையா தெரிவித்தார்.
ஞானலிங்கத்தின் மலேசியக் குடும்பம்
தற்போது ஞானலிங்கத்தின் மகன் ரூபன் எமிர் ஞானலிங்கம் நிர்வாக இயக்குநராக வெஸ்ட்போர்ட் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். ஞானலிங்கத்தின் குடும்பமும் உண்மையான மலேசியக் குடும்பமாகத் திகழ்கிறது. ஞானலிங்கம் இலங்கைத் தமிழர். அவரின் துணைவியார் சியூ யோங் என்ற பெயர் கொண்ட சீனப் பெண்மணி ஆவார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித்துறையில் பட்டம் பெற்றவர் சியூ யோங்.
1980ஆம் ஆண்டுகளில் மாஸ் விமான நிறுவனத்தின் சார்பில் அறிக்கைகளும் அறிவிப்புகளும் அந்நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் சியூ யோங் ஞானலிங்கம் என்ற பெயரில் வெளிவரும். அந்த சியூ யோங் தான் ஞானலிங்கத்தின் துணைவியார். ரூபன்,ஷாலின்,சூரின் என மூன்று பிள்ளைகள் ஞானலிங்கம் தம்பதியருக்கு. ஞானலிங்கத்தின் மகன் ரூபன் இஸ்லாமியப் பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்தவர். இதன் காரணமாக அவரின் குடும்பம் இன்று ஓர் உண்மையான மலேசியக் குடும்பமாகத் திகழ்கிறது.
மைக்கா ஹோல்டிங்ஸ் இழுபறிக்குத் தீர்வு கண்டவர்
நீண்ட காலமாக இழுபறியாக நீடித்து வந்த மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு அதன் பங்குதாரர்களுக்கு மீண்டும் தங்களின் முதலீடுகளில் பெரும்பகுதி மீண்டும் கிடைக்க வழிவகுத்துத் தந்தவர் ஞானலிங்கம். பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் கொண்டிருந்த நெருக்கத்தால் அந்த முயற்சியை மேற்கொண்டு வெற்றியும் பெற்றார் ஞானலிங்கம். அவர் மைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரத்தைக் கையாண்ட விதத்தில் சில சர்ச்சைகள் இருந்தாலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறி சிக்கலில் நீடித்து வந்த அந்த விவகாரத்தை வியூகத்துடன் திட்டமிட்டு, வணிக ரீதியாக அதற்கு தீர்வு கண்டார். இந்திய சமூகத்தின் பிரச்சனை ஒன்றைத் தீர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன்தான் அந்தப் பணியில் அவர் ஈடுபட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஞானலிங்கத்தின் சுலோகம் ஒன்றை அவர் குறித்த கட்டுரையில் அடிக்கடி குறிப்பிடுவார்கள். “தாஜ்மகால் ஷா ஜஹானால் கட்டப்பட்டதல்ல. தொழிலாளர்களால் கட்டப்பட்டது” என்பதுதான் அந்த வாசகம். அதற்கேற்ப தன்னிடம் பணியாற்றிய தொழிலாளர்களின் நலன்களையும் அவர் நன்கு கவனித்துக்கொண்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.