Home Photo News அப்துல்லா படாவி – அன்வார் இப்ராகிம்: 40 ஆண்டுகாலம் நேரெதிர் அரசியல் நடத்திய இருதுருவங்கள்!

அப்துல்லா படாவி – அன்வார் இப்ராகிம்: 40 ஆண்டுகாலம் நேரெதிர் அரசியல் நடத்திய இருதுருவங்கள்!

124
0
SHARE
Ad

(ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இருவேறு முனைகளில் இருந்து அரசியல் களத்திற்குள் காலடி வைத்தவர்கள் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியும், நடப்பு 10-வது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும்! அவர்களுக்கு இடையிலான 40 ஆண்டுகால இரு துருவ அரசியல் குறித்தும், எதிரும் புதிருமாக அவர்கள் மோதிக் கொண்ட அரசியல் சூழல்கள் குறித்து விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

  • இருவருமே பினாங்கு மாநிலத்தில் இருந்து அரசியல் களத்திற்கு வந்தவர்கள்
  • இளம் வயது முதல் நேரெதிர் திசைகளில் தொடங்கிய பயணம்!
  • இருவேறு துருவங்களாக செயல்பட்டாலும் இருவருமே பிரதமர்களானார்கள்!

1969-ஆம் ஆண்டு மே 13 கலவரங்களின் வெப்பம் தணிந்து, நாடாளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு – நாட்டின் நிர்வாக அதிகாரம் துணைப் பிரதமர் துன் அப்துல் ரசாக் தலைமையிலான மாகெரான் என்னும் தேசிய நடவடிக்கை மன்றத்தின் (MAGERAN – Majlis Gerakan Negara) கீழ் கொண்டுவரப்பட்ட காலகட்டம்.

அந்த தேசிய நடவடிக்கை மன்றத்தில் அரசாங்க சார்பு செயலாளராக – அதிகாரியாக- செயல்பட திறமை வாய்ந்த ஒருவரை துன் ரசாக் அரசாங்க சேவையில் பணியாற்றிவர்களிடையே தேடினார். அது நெருக்கடியான தருணம் என்பதால் ஆளும் அம்னோவுக்கு ஆதரவானவராகவும் அவர் இருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

துன் ரசாக்கால் அந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல்லா அகமட் படாவி. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த படாவி மலாயாப் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமியக் கல்வியில் பட்டப் படிப்பை முடித்து 1964-இல் அரசாங்க சேவையில் இணைந்தவர். படாவியின் குடும்பமும் அம்னோ பின்னணியைக் கொண்டது.  படாவியின் திறமையை அறிந்து அவரை மாகெரானின் செயலாளராக நியமித்தார் துன் ரசாக். 1971-ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கும்வரை மாகெரான் நாட்டை ஆட்சி செய்தது.

அன்வாரின் பல்கலைக் கழகப் பிரவேசம்

துன் படாவியின் இறுதிச் சடங்கில் அன்வார்

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் மலாய் மொழிப் பிரிவில் 1968-இல் மாணவராக நுழைகிறார் அதே பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த அன்வார் இப்ராகிம் என்ற மாணவர். பல்கலைக் கழக மாணவர் இயக்கங்களிலும், இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளிலும் தீவிரமாக ஈடுபடத் தொடங்குகிறார் அன்வார்.

அவரின் குடும்பமும் அம்னோ பின்னணியைக் கொண்ட குடும்பம். இவ்வாறு இருவேறு முனைகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த அவர்கள் இருவருக்கும் தெரியாத ஒன்று – அடுத்து வரும் 40 ஆண்டுகளுக்கு – விதிவசத்தால் – அவர்கள் இருவருமே நேரெதிர் திசைகளில் அரசியல் களத்தில் பயணம் செய்யப் போகிறார்கள் என்பதும் இருவருமே எதிர்காலத்தில் பிரதமராவார்கள் என்பதும்!

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின்  தலைமை இயக்குநராக…

1969-இல் மாகெரான் என்னும் பிரதமர் துன் அப்துல் ரசாக் தலைமையிலான தேசிய
நடவடிக்கை மன்ற உறுப்பினர்கள். துன் சம்பந்தன் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறார். பின்வரிசையில் இடது கோடியில் நிற்பவர் அந்த
மன்றத்தின் அரசாங்கச் செயலாளராகப் பணியாற்றிய அப்துல்லா படாவி.

அன்வார், பல்கலைக் கழகப் படிப்பை முடித்து, அபிம் என்னும் (Angkatan Belia Islam Malaysia) இஸ்லாமிய இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

அபிம் போன்ற இஸ்லாமிய இளைஞர் இயக்கங்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, அப்துல்லா படாவி இளைஞர் விளையாட்டுத் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். நாட்டிலுள்ள இளைஞர் அமைப்புகளைக் கண்காணிக்கும் பொறுப்பு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சுக்கு இருந்ததால், அந்த அமைச்சின் முக்கிய அதிகாரியாக படாவியும் இளைஞர் அமைப்புகளின் தலைவராக அன்வாரும் நேரெதிர் திசைகளில் செயல்பட்டனர்.

1978 – 1982 பொதுத் தேர்தல்கள்

இறுதி மரியாதை செலுத்த வந்த அன்வாருடன், படாவியின் மருமகன் கைரி ஜமாலுடின்

1976-இல் துன் ரசாக் மரணத்தைத் தொடர்ந்து பிரதமரானார் துன் ஹூசேன் ஓன். மாகெரான் செயலாளர் – இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் பணிகள் – ஆகியவற்றின் மூலம் படாவியின் திறன்களை அறிந்து கொண்ட ஹூசேன் ஓன் 1978 பொதுத் தேர்தலில் பினாங்கு கப்பளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தார். படாவியும் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அதே ஆண்டில் கூட்டரசுப் பிரதேச அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராகவும் பின்னர் அதே அமைச்சின் துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

அன்வாரோ 1974-இல் நடைபெற்ற பல்கலைக் கழக மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து – 20 மாத உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவாசம் முடிந்து – அபிம் இயக்கத்திலும், தேசிய, அனைத்துலக இளைஞர் இயக்கங்களில் தீவிரமாக இயங்கி வந்தார். அரசியலில் அவர் ஈடுபடவில்லை என்றாலும், அவரின் இஸ்லாமியப் பின்னணி காரணமாக, பாஸ் கட்சியில் அவர் இணைவார் என்றே அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

1981-ஆம் ஆண்டில் துன் ஹூசேன் ஓன் பதவி விலக, மகாதீர் முகமட் பிரதமரானார். 1982-இல் தனது முதல் பொதுத் தேர்தலைச் சந்தித்த மகாதீர் யாரும் எதிர்பாராதவிதமாக அன்வாரை அம்னோவுக்குள் இணைத்து பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். அன்வாரும் வெற்றி பெற்றார். பின்னர் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதே தேர்தலில் படாவி மீண்டும் கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, பிரதமர் துறை அமைச்சராக மகாதீரால் நியமிக்கப்பட்டார்.

அம்னோ, அரசாங்கம் என அன்வார்-படாவி இருவருமே ஒரே தளத்தில் தங்களின் அரசியல் பயணங்களைத் தொடர்ந்தனர். அன்வார் அம்னோவின் இளைஞர் பகுதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   படாவியோ அம்னோ உச்சமன்ற உறுப்பினர், உதவித் தலைவர் பதவிகளில் தொடர்ந்தார்.

1987-இல் மீண்டும் எதிர் திசைகளில்
படாவி – அன்வார்

அவர்கள் இருவரும் மீண்டும் எதிர்த் திசைகளில் மோதிக் கொள்ளும் திருப்பம் 1987-இல் நிகழ்ந்தது. அம்னோ தலைவர் பதவிக்கு மகாதீரை  எதிர்த்து துங்கு ரசாலி களமிறங்கினார். தன்னை அம்னோ அரசியலுக்குள் கொண்டு வந்த மகாதீரை அன்வார் ஆதரித்தார். படாவியோ துங்கு ரசாலியை ஆதரித்தார்.

படாவி – அன்வார் இருவருக்கும் இடையில் அம்னோவில் முதல் நேரடி மோதல் நிகழ்ந்தது 1987 அம்னோ தேர்தல்களின்போதுதான்! தலைவர் பதவிக்கு அன்வார் மகாதீரை ஆதரிக்க – படாவி துங்கு ரசாலியை ஆதரிக்க – இருவருமே 3 அம்னோ உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அப்போதைய திரெங்கானு மந்திரி பெசார் வான் மொக்தார் முதலாவது உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட, படாவி 879 வாக்குகளில் இரண்டாவது உதவித் தலைவராகவும், அன்வார் 850 வாக்குகளில் மூன்றாவது உதவித் தலைவராகவும் வெற்றி பெற்றனர்.

அதைத் தொடர்ந்து தற்காப்பு அமைச்சராக இருந்த படாவியை மகாதீர் அமைச்சரவையிலிருந்து நீக்கினார். அன்வாரோ கல்வி அமைச்சராகத் தொடர்ந்தார்.

அம்னோ பிளவு கண்டு, துங்கு ரசாலி ஹம்சா, செமாங்காட் 46 கட்சியைத் தோற்றுவித்தபோது படாவி அதில் சேராமல் அம்னோவிலேயே தொடர்ந்ததால் மகாதீருக்கு அவர் மீது அபிமானமும் மரியாதையும் ஏற்பட்டது. 1991-இல் மீண்டும்  அவரை வெளியுறவு அமைச்சராக அமைச்சரவைக்குள் கொண்டு வந்தார் மகாதீர்.

1993 அம்னோ தேர்தல் வந்தபோது அன்வார், படாவியைப் பின்னுக்குத் தள்ளி  முந்திக் கொண்டார். அந்த ஆண்டு அம்னோ தேர்தலில் அன்வார் துணைத் தலைவரானார். படாவியோ உதவித் தலைவருக்கான போட்டியில், தோல்வி கண்டார். படாவியின் தோல்விக்கு அன்வார் ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களிக்காததே காரணம் என்ற கருத்தும் அப்போது நிலவியது. ஆனால், ஆமை, முயல் கதைபோல படாவியும் அன்வாரை முந்தும் காலம் ஒன்றும் கனிந்தது!

1997 மகாதீர் – அன்வார் போராட்டக் களம்

1996 அம்னோ தேர்தலில் அன்வார் போட்டியின்றி மீண்டும் துணைத் தலைவரானார். உதவித் தலைவர் தேர்தலில் முதலாவதாக நஜிப் துன் ரசாக் (1,483 வாக்குகள்) இரண்டாவதாக அப்துல்லா படாவி (1,053 வாக்குகள்) மூன்றாவதாக சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்த முகமட் தாயிப் (1,045 வாக்குகள்) வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் மீண்டும் அம்னோ அரசியலில் முக்கியத்துவம் பெற்றார் படாவி.

அடுத்த ஒரே ஆண்டில், 1997-இல் அம்னோ அரசியல் களம் மகாதீர்-அன்வார் மோதலால் முற்றாக மாறியது. அன்வார், ஊழல், ஓரினச் சேர்க்கை வழக்குகளால் சிறை செல்ல நேர்ந்தது. அவருக்குப் பதிலாக துணைப் பிரதமராக – 400க்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் முதலாவது உதவித் தலைவராக வெற்றி பெற்ற நஜிப்பை மகாதீர் நியமிப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க – திடீர் திருப்பமாக படாவியை  துணைப் பிரதமராக்கினார் மகாதீர்.

அடுத்து 2003-இல் மகாதீர் பிரதமராகப் பதவி விலக – படாவி பிரதமரானார். இப்போது படாவி பிரதமர் – அன்வார் எதிர்க்கட்சித் தலைவராக சிறையில் – என மீண்டும் அவர்கள் அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அன்வாரை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நெருக்குதலும் படாவிக்குத் தரப்பட்டது. அன்வாரின் மனைவி வான் அசிசா படாவியை நேரில் சந்தித்து அன்வாரை விடுவிக்கும் கோரிக்கையை வைத்த சம்பவமும் நிகழ்ந்தது.

2004 பொதுத் தேர்தலில் படாவியின் அபார வெற்றி

பிரதமராகப் பதவியேற்ற 6 மாத காலத்தில் – 2004 மார்ச் மாதத்தில் – 11-வது பொதுத் தேர்தலை அறிவித்தார் படாவி. வரலாறு காணாத அளவுக்கு 90 விழுக்காட்டு நாடாளுமன்றத் தொகுதிகளை அவர் தலைமையிலான தேசிய முன்னணி கைப்பற்றியது.

2004 செப்டம்பரில் அன்வார் 6 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலையானார். பக்காத்தான் ராயாட் என்ற கூட்டணியை அமைத்து எதிர்க்கட்சித் தலைவரானார். இப்போது பிரதமராக படாவி – எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவராக அன்வார் – என மீண்டும் அவர்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

2008 மார்ச் மாதத்தில் நாட்டின் 12-வது பொதுத் தேர்தலை அறிவித்தார் படாவி. அன்வார் சிறைத் தண்டனை காரணமாக  பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்தார். 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அன்வார் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடத் தகுதி பெற்றுவிடுவார் என்பதால் அதற்கு முன்பாகவே, அவசரம் அவசமாக மார்ச் 8-ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்தினார் படாவி.

அந்த அவசரமே அவருக்கு ஆபத்தாக முடிந்தது. 2007-இல் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணி – அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 ஹிண்ட்ராப் போராளிகளை விடுதலை செய்யாமல் பொதுத் தேர்தலை அவர் சந்தித்தது – ஆலய உடைப்பு சம்பவங்கள் – ஆகிய காரணங்களால் இந்திய வாக்குகளை அவர் இழக்க நேர்ந்தது. இன்னொரு பக்கம் தன்னைப் பிரதமராக்கிய மகாதீரிடம் இருந்தே கடும் எதிர்ப்புகளை- சாடல்களை- படாவி எதிர்கொள்ள நேர்ந்தது.

அன்வாரோ முதன் முறையாக எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவராக நேரடியாக களத்தில் நின்று படாவிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். எதிரும் புதிருமான பாஸ், ஜசெக கட்சிகளை ஒரே கூட்டணிக்குள் கொண்டு வந்து, ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே ஒரு எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் என்ற வியூகத்தைச் செயல்படுத்தினார். விளைவு? படாவி தலைமையிலான தேசிய முன்னணி 5 மாநிலங்களையும் – நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் – இழந்தது.

இப்போது பிரதமராக, ஆளும் தேசிய முன்னணி தலைவராக படாவி – எதிரணியில் கூட்டணித் தலைவராக அன்வாரை எதிர்கொள்ள நேர்ந்தது.

நாடாளுமன்றத்திலும் நேருக்கு நேர் மோதல்

அடுத்து நேர்ந்தது இன்னும் சுவாரசியம்! 2008 ஆகஸ்டில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வாரின் மனைவி வான் அசிசா பதவி விலக – தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் அன்வார் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தார்.

இப்போது நாடாளுமன்றத்திலும் பிரதமராக படாவி – நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் – இருவரும் நேரெதிர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

நஜிப்பின் நெருக்குதலால் 2009-இல் பதவி விலகினார் படாவி. அத்துடன் அன்வாருடன் அவர் எதிரும் புதிருமாகக் கொண்டிருந்த 40 ஆண்டுகால அரசியல் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.

கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 14-ஆம் தேதி காலமான படாவி – அரசு மரியாதையுடன் – தேசியப் பள்ளிவாசலில் உள்ள மாவீரர்கள் கல்லறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) நல்லடக்கம் செய்யப்பட்டார். மாவீரர்கள் கல்லறையில் அவர் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் முடிவை எடுத்தவர் – அந்த அதிகாரத்தைக் கொண்டிருந்த இன்றைய பிரதமரும் அவருடன் நீண்ட காலம் அரசியல் போராட்டம் நடத்தியவருமான அன்வார் இப்ராகிம் – என்பது அவர்கள் இருவருக்கும் இடையிலான, எதிரும் புதிருமான நீண்டகால அரசியல் பயணத்தின் நெகிழ்ச்சியான நிறைவு!

-இரா.முத்தரசன்