அவரின் பணிகளில் முக்கியமாகக் கருதப்படுவது இந்திய மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையையும், ஆன்மீக ஈர்ப்பையும் ஒருசேர விதைத்தது.
மாணவர்களை கல்வியில் உயர்த்துவதற்கு அவர் தோற்றுவித்த அமைப்பின் பெயரே ஸ்ரீ முருகன் நிலையம். ஞானக் கடவுள் என இந்துக்களிடையே வணங்கப்படும் முருகனையே கல்விக் கடவுளாக்கி, ஆண்டுதோறும் கல்வி யாத்திரை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மாணவர்களை பத்துமலையில் ஒன்று திரட்டினார் தம்பிராஜா. கல்வி விரதம் இருந்து அங்கு திரண்ட இந்திய மாணவர்களின் மனங்களில் நம்மாலும் மற்ற இனங்களுக்கு நிகராக கல்வியிலும் அனைத்துத் துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை விதைகளைத் தூவினார். அவரின் வழிகாட்டுதலில் பல மாணவர்கள் கல்வியில் உயர்ந்து இன்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர்.
நேற்று திங்கட்கிழமை (ஜூன் 23) தன் 84-வது வயதில் தம்பிராஜா காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.


வரலாற்றுப் பேராசிரியர் – வழக்கறிஞரானார்!
இங்கிலாந்திலுள்ள கெர்பி என்னும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய தம்பிராஜா பின்னர் படிப்படியாக பட்டங்கள் பல பெற்று மலாயாப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரானார்.
இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கென அவர் எழுதிய வரலாற்று நூல்கள் பாட நூல்களாகத் தேர்வு பெற்றன.
தம்பிராஜாவைப் பற்றி பலருக்கும் தெரியாத இன்னொரு தகவல் அவர் ரஷிய வரலாற்றைப் படித்து, அதில் ஆழ்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர் என்பது. அதன் மூலம் அவர் ரஷிய மொழியையும் கற்றுத் தேர்ந்தார். ஒரு காலகட்டத்தில் கோலாலம்பூரில் உள்ள ரஷியத் தூதரகத்தில் ரஷிய மொழி ஆர்வம் உள்ளோருக்குக் கற்பித்தார்.
கல்வியில் ஒரு மனிதன் எவ்வளவு தூரத்திற்கு உச்சம் தொடலாம் என்பதற்கு தம்பிராஜாவே உதாரணமாகத் திகழ்ந்தார். முனைவர் பட்டம் பெற்ற, மலாயாப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக பணிபுரிந்த வேளையில் பகுதி நேரமாக சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞரானார். சொந்த வழக்கறிஞர் நிறுவனத்தையும் நடத்தினார்.
இந்திய மாணவர்களின் பின்தங்கிய நிலை, பல்கலைக் கழகங்களில் இடம் பெற அவர்களுக்கு போதிய இடங்கள் கிடைக்காதது குறித்து பல கருத்தரங்குகளில், கல்வி மாநாடுகளில் முழங்கிய தம்பிராஜா, ஒரு கட்டத்தில் – 1982-இல் தானே அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முன்வந்தார். ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை விசுவாசமிக்க தன் முன்னாள் மாணவர்களின் துணையோடு தோற்றுவித்து வழி நடத்தினார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சி என்பது அவர்கள் வேர்விடும்போதே உரமிட்டால்தான் சாத்தியம் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக நாடு முழுவதும் யூபிஎஸ்ஆர், எஸ்ஆர்பி (பின்னர் பிடி3), எஸ்பிஎம், எஸ்டிபிஎம் ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நாட்டின் பல இடங்களில் தொடங்கினார்.
இந்திய மாணவர்களின் கல்விப் பிரச்சனைக்குத் தனிமனிதனாக தானே முன்னின்று தீர்வுகளைக் கண்டவர் என்பதுதான் தம்பிராஜாவின் சிறப்பு.
பிற்காலத்தில் பல நல்லுள்ளங்களும், பிரதமர் நஜிப் துன் ரசாக் போன்றவர்களும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் வளர்ச்சிக்கு தாராளமாக நிதி வழங்கினர். இன்று பெட்டாலிங் ஜெயாவில் சொந்தக் கட்டடத்தை ஸ்ரீ முருகன் நிலையம் கொண்டிருக்கிறது.


தம்பிராஜாவின் கல்வி சேவைகள் மலேசியாவையும் தாண்டி மற்ற நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்திய அரசாங்கம் 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பாரதிய சம்மான் விருதை தம்பிராஜாவுக்கு வழங்கி சிறப்பித்தது. அப்போதைய இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி அந்த விருதை தம்பிராஜாவுக்கு வழங்கினார்.
அவரின் உழைப்பில் உருவான அந்த நிலையத்தில்தான் மறைந்த தம்பிராஜாவின் நல்லுடல் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் என்பது அவருக்கு வழங்கப்படும் சிறந்த மரியாதை.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இறுதிச் சடங்குகள் ஷா ஆலாமில் உள்ள நிர்வானா மெமோரியல் பார்க் என்னும் இடத்தில் நடத்தப்படும்.
அன்னாரின் கல்விச் சேவைகளை நினைவு கூர்ந்து, அவரின் ஆன்மா சாந்தியுறப் பிரார்த்திப்போம்.