Home நாடு ஆனந்த கிருஷ்ணன் வணிக உலகை இனி ஆளப் போவது யார்?

ஆனந்த கிருஷ்ணன் வணிக உலகை இனி ஆளப் போவது யார்?

217
0
SHARE
Ad
ஆனந்த கிருஷ்ணன்

கோலாலம்பூர் : மலேசியாவில் மிகப் பெரிய இந்தியப் பணக்காரராக முத்திரை பதித்த ஆனந்த கிருஷ்ணன் தனது 86-வது வயதில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 28) காலமானதைத் தொடர்ந்து அவரின் பரந்து விரிந்த வணிக உலகின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

அவரின் சொத்து மதிப்பு 5.8 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்படுகிறது. மலேசிய ரிங்கிட் மதிப்பில் 25.7 பில்லியன். இந்த மதிப்பு கூட அவரின் நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். அவரின் தனிப்பட்ட சொத்துகள் மேலும் கூடுதலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


மேலும் படிக்க:

மலேசியாவின் 50 பணக்காரர்களில் இருவர் தமிழர்கள்! ஆனந்த கிருஷ்ணன் – ரூபன் ஞானலிங்கம் குடும்பத்தினர்!


#TamilSchoolmychoice

இனி அவரின் வணிக நிறுவனங்களை யார் நிர்வகிப்பார்கள் – அவரின் நிர்வாக வாரிய இயக்குநர்களோ – அல்லது குடும்பத்தினரா – அல்லது அறவாரியங்களா – அல்லது எவ்வாறு தனது சொத்துகள் நிர்வகிக்கப்பட வேண்டும் என அவர் ஏதாவது உயில் மூலமான ஏற்பாடுகளைச் செய்துள்ளாரா என்பது இதுவரை தெரியவில்லை.

கைப்பேசிகளுக்கான தொலைத் தொடர்பு நிறுவனமான மேக்சிஸ், தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ஆஸ்ட்ரோ ஆகிய இரண்டும் அவரின் நிறுவனங்களாகும். மேக்சிஸ் அவரால் தோற்றுவிக்கப்பட்டு நாளடைவில் வளர்ச்சி பெற்று இன்று இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது.

ஆஸ்ட்ரோ தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஏகபோக உரிமை பெற்ற நிறுவனமாகும்.

உசாஹா தெகாஸ் என்ற நிறுவனத்தை அதன் தோற்றுநராக உருவாக்கிய அவர் அந்நிறுவனத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். அந்த நிறுவனத்தின் மூலமாகவே அவரின் பெரும்பாலான சொத்துகள் – பங்குகள் – பராமரிக்கப்படுகின்றன.

இலங்கைத் தமிழரான அவரின் தந்தையார் அரசாங்க ஊழியராவார். பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர் பின்னர் விக்டோரியா இன்ஸ்டிடியூட்டில் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்தார்.

சிறந்த மாணவராகத் திகழ்ந்த அவருக்குக் கிடைத்த கொழும்பு உபகாரச் சம்பளத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் அவர் அரசியல் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ.ஹானர்ஸ்) பெற்றார்.

பின்னர் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் 1964-இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அவருக்கு 3 பிள்ளைகள். அவர்களில் ஆண்பிள்ளையான வேன் அஜான் சிரிபான்யோ புத்தமதத் துறவியாக ஆன்மீகத்தில் இணைந்து விட்டார். ஒரு முறை தன் மகனைப் பார்க்க ஆனந்த கிருஷ்ணன் பினாங்குக்கு வந்திருந்தது ஊடகங்களில் பேசுபொருளானது.