சிங்கப்பூர்: 2019-ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் மலேசிய செல்வந்தர்கள் பட்டியலில், ரோபர்ட் குவோக் மீண்டும் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளார். சுமார் 12.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவர் முன்னிலையில் உள்ளார்.
இதற்கிடையே, மலேசிய இந்தியர்களின் பெருமையாக திகழ்ந்த ஆனந்த கிருஷ்ணன், நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அவரது சொத்து மதிப்பு 6.2 பில்லியன் டாலராக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இடம் பெற்ற ஆனந்த கிருஷ்ணனுக்கு, இந்தியாவின் இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனத்துடன் பெரிய அளவிலான முதலீடு இருந்தது. அந்நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏர்செல் நிறுவனத்தில் சுமார் 7 பில்லியன் டாலரை ஆனந்த கிருஷ்ணன் முதலீடு செய்திருந்தார். மேலும் , இந்தோனிசிய செல்வந்தரான மொக்தார் ரியாடி லிப்போ குழுமத்தினுடனான நீண்ட நாள் சட்டப் பிரச்சனையின் காரணமும் அவரது சரிவுக்கு வித்திட்டது என நம்பப்படுகிறது.
இரண்டாவது நிலையில், குவேக் லெங் சான் இடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 9.7 பில்லியன் டாலராக பதிவிடப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து, மூன்றாவது நிலையில், பப்ளிக் வங்கியின் தலைவர் தே ஹோங் பியோவின் சொத்து மதிப்பு 6.7 பில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது.