![](https://selliyal.com/wp-content/uploads/2024/11/saravanan-MIC-SELANGOR-AGM-11082024.jpg)
புத்ராஜாயா – அனைத்து இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஆண்டுதோறும் பராமரிப்பு உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை என ஊராட்சித் துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் ங்கா கோர் மிங் அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தினார்.
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிதி ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என அமைச்சு ஏற்கனவே சட்டவிதித் திருத்தம் ஒன்றை சமர்ப்பித்தது தொடர்பில் மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கடுமையானக் கண்டனங்களைப் பதிவு செய்திருந்ததோடு, மடானி அரசாங்கத்தின் இந்த முடிவு அபத்தமானது, முட்டாள்தனமானது என சாடியிருந்தார். இந்த முடிவு மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் சரவணன் அறைகூவல் விடுத்திருந்தார்.
சரவணனின் அறிக்கை, கண்டனங்களைத் தொடர்ந்து பல்வேறு இந்து தரப்பினரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
ஊராட்சித் துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் ங்கா கோர் மிங் தனது அறிக்கையில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு இடங்கள் ஆண்டுதோறும் பராமரிப்பு நிதி கோரலாம் என உறுதிப்படுத்தினார்.
இந்த உதவி ஒவ்வொரு விண்ணப்பத்தின் தேவைகளின் அடிப்படையில் வழங்கப்படும் மற்றும் அவசர உதவி தேவைப்படும் மற்றும் முன்பு எந்த உதவியும் பெறாத அமைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தனது அமைச்சகம் எந்த விண்ணப்பத்தையும் தடுக்காது, முன்பு உதவி பெற்ற அமைப்புகளின் விண்ணப்பங்கள் உட்பட – என்ற உத்தரவாதம் அளித்தார்.
“இந்த முன்முயற்சி அவசர உதவி தேவைப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கும், அமைச்சு ‘யாரும் பின்தங்கவில்லை, யாரும் விலக்கப்படவில்லை’ என்ற உறுதிப்பாட்டுடன் இணங்குகிறது. இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஒவ்வொரு ஆண்டும் அமைச்சுக்கு விண்ணப்பிக்கலாம். நிதி தேவைகள் மற்றும் நிதி நிலைமைகளின் அடிப்படையில் மானியங்கள் வழங்கப்படும்,” என்று அவர் தன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் அக்டோபர் மாதம் வரை, ஊராட்சித் துறை, வீடமைப்பு அமைச்சு, 422 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ரிங்கிட் 46.13 மில்லியன் பராமரிப்பு உதவி வழங்கியுள்ளது, இதில் கோவில்கள், தேவாலயங்கள், குருத்வாரா, சீன ஆலயங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த தொகையில் 147 கோவில்கள் மற்றும் 25 குருத்வாரா தலங்கள் ரிங்கிட் 21.35 மில்லியன் உதவி பெற்றுள்ளன.
2025 வரவு செலவுத் திட்டத்தில் மடானி அரசாங்கம் மேலும் ரிங்கிட் 50 மில்லியனை இஸ்லாம் அல்லாத வழிபாட்டு இடங்கள் பராமரிப்பு உதவிக்காக ஒதுக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, நாட்டின் பல்வேறு கலாச்சார, சமுதாய, பன்முகத் தன்மையை மதித்து, மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஆதரிக்கும் மடானி அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளின் ஓர் அங்கமாகும்.