Home நாடு மாஸ் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொல்கத்தாவுக்கு சிறகு விரிக்கிறது

மாஸ் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொல்கத்தாவுக்கு சிறகு விரிக்கிறது

197
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் (மாஸ்) 18 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கொல்கத்தா-கோலாலம்பூர் நேரடி விமானப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது.

டிசம்பர் 2 முதல் வாரத்திற்கு ஐந்து தடவை போயிங் 737-800 ரக விமானத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மாஸ் இந்த வழித் தடத்தில் பயணம் மேற்கொள்ளும்.

சமீபத்தில் அமிர்தசஸ் நகருக்கு தினசரி பயணங்களை மாஸ் வெற்றிகரமாகத் தொடங்கியது.

#TamilSchoolmychoice

கடந்த 2006 ஆம் ஆண்டில் நிறுவனம் கொல்கத்தா-கோலாலம்பூர் நேரடி பயணங்களை மாஸ் நிறுத்தியிருந்தது.

கொல்கத்தாவுக்கான மலேசியாவின் கௌரவ தூதரகப் பிரதிநிதி சஞ்சய் புதியா, “வீசா இன்றி நுழைவு மற்றும் கொல்கத்தாவிலிருந்து நேரடி பயணம்” இரு நாடுகளுக்கு இடையிலான வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று கூறினார்.

மாஸ் இந்திய நகர்களுக்கான நேரடி இணைப்பை 10 நகர்களுக்கு விரிவாக்கியுள்ளது. புதுடில்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, ஐதராபாத், கொச்சி, அமிர்தசரஸ், திருவனந்தபுரம், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகியவையே அந்த நகர்களாகும்.

“மலேசியா மற்றும் இந்தியா இடையிலான பயணிகளுக்கு மேம்பட்ட இணைப்பை வழங்கும் எங்கள் தொடர் முயற்சிகளில் ஓர் அங்கமாக கொல்கத்தாவிற்கு நேரடிப் பயணங்களை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா எங்களுக்கு ஒரு முக்கிய சந்தை” என மாஸ் விமானப் போக்குவரத்து குழுமத்தின்  தலைமை நிருவாக அதிகாரி அகமட் லுக்மான் முகமட் அஸ்மி கூறினார்.

தற்போது இரு நாடுகளுக்கு இடையில் வாரத்திற்கு 76 பயணங்களை மாஸ் வழங்குகிறது.

எம்எச் (MH) 184 கோலாலம்பூரிலிருந்து கொல்கத்தாவுக்கு இரவு 9.35 மணிக்கு திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் புறப்படும். அதே விமானம் மீண்டும் எம்எச் (MH) 185 என்ற வழித்தட எண்ணில், கொல்கத்தாவிலிருந்து கோலாலம்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கு அதே நாட்களில் பயணம் மேற்கொள்ளும்.