Home Photo News ஹிண்ட்ராப் போராட்டம் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள்!

ஹிண்ட்ராப் போராட்டம் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள்!

187
0
SHARE
Ad
ஹிண்ட்ராப் போராட்டம் – 2007

(25 நவம்பர் 2007-இல் நாட்டையே உலுக்கிய ஹிண்ட்ராப் போராட்டம் நடந்து 17 ஆண்டுகள் கடந்து விட்டன. நமது நாட்டில் அந்தப் போராட்டம் ஏற்படுத்திய ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களை – தாக்கங்களை – நினைவு கூர்கிறார் இரா.முத்தரசன்)

2007-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி இரவு கோலாலம்பூரின் வீதிகளில் வாகனங்கள் வழக்கம்போலவே இயங்கின. வழக்கமான சூழலுக்கு சற்றே மாறாக சில இடங்களில் மட்டும் ஆங்காங்கு இந்தியர்கள் சிறு குழுக்களாக தெருவோரங்களில் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

ஹிண்ட்ராப் தலைவர்கள் ஓரிரு மாதங்களாக நாடு தழுவிய அளவில் சமூக உணர்வாளர்களைச் சந்தித்து நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள கோரிக்கைகள் விடுத்தனர் என்ற தகவல்களும் உலவின.

எவெரெஸ்ட் மலையேறிய வீரர் மூர்த்தியின் மதமாற்ற விவகாரம், அரசாங்கத் தரப்பினாலேயே அவ்வப்போது உடைக்கப்பட்ட இந்து ஆலயங்கள், ஆகிய காரணங்களுக்காக சில முற்போக்கு இளைஞர்களின் சிந்தனையில் உருவான இயக்கம் ஹிண்ட்ராப். ஹிண்ட்ராப் போராட்டம் நடைபெற்றபோது அந்த இயக்கம் சங்கப் பதிவிலாகாவில் பதிவு பெற்றிருக்கவில்லை.

#TamilSchoolmychoice

நவம்பர் 25-இல் ஹிண்ட்ராப் போராட்டம் நடைபெறும் என்பது குறித்த செய்திகள் நிறைய அளவில் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. எனினும், பெரும்பாலோர் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

நவம்பர் 25-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை விடிந்தபோது, இத்தனை பிரம்மாண்ட எண்ணிக்கையில் இந்தியர்கள் – அதுவும் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 7 விழுக்காட்டை மட்டுமே கொண்டிருந்த சிறுபான்மை சமூகத்தினர் – இந்த அளவுக்கு வீரியத்துடனும், வீரத்துடனும் – காவல் துறையின் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி வீதிகளில் திரள்வார்கள் – என யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஊடகங்களின் மதிப்பீட்டின்படி சுமார் 1 இலட்சம் இந்தியர்கள் அன்றைய நாளில்  வீதிகளில் திரண்டார்கள்.

இலண்டன் நீதிமன்றத்தில் மலேசிய இந்தியர்களுக்காக ஹிண்ட்ராப் வழக்கு தொடுக்கும் என்றும் அதற்கான மகஜரை பிரிட்டன் தூதரகத்தில் வழங்குவதற்காக அணிவகுத்துச் செல்வோம் என்றும் ஹிண்ட்ராப் தலைவர்கள் அறிவிக்க – அந்த சம்பவங்களே ஹிண்ட்ராப் போராட்டமாக வெடித்தன.

அந்தப் போராட்டத்தின் பின்னணிகளும், அன்று நடைபெற்ற சம்பவங்களும் இன்றைக்கு காலங்கடந்த – மறந்து போன அம்சங்களாகி விட்டன. ஆனால் அந்த ஹிண்ட்ராப் போராட்டத்தினால் விளைந்த அரசியல் மாற்றங்கள் – தாக்கங்களை – இன்றளவுக்கும் உணர முடிகின்றது. அனுபவிக்க முடிகின்றது. அவற்றின் சில விளைவுகளைப் பார்ப்போம்.

5 போராளிகளை சிறையிலடைத்த அப்துல்லா படாவி

அப்துல்லா அகமட் படாவி

ஹிண்ட்ராப் போராட்டத்தின்போது காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினர்.

ஹிண்ட்ராப்பின் 5 முக்கியத் தலைவர்களான பி.உதயகுமார், வீ.கணபதிராவ், டி.வசந்தகுமார், ஆர்.கங்காதரன், மனோகரன் மலையாளம் ஆகிய ஐவரும் ஐஎஸ்ஏ என்னும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.

2007-இல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதான 5 போராளிகள் – உதயகுமார்-மனோகரன் மலையாளம் -கங்காதரன்-கணபதி ராவ் – வசந்தகுமார்

மற்றொரு தலைவரான பொன்.வேதமூர்த்தி காவல்துறையில் சிக்காமல் இலண்டனுக்குப் பறந்து சென்றார். அடுத்த சில ஆண்டுகளுக்கு நாடு கடந்து வாழ்ந்து ஹிண்ட்ராப் போராட்டத்தை முன்னெடுத்தார். முக்கியத் தலைவர்கள் சிறையில் வாட அடுத்த கட்ட ஹிண்ட்ராப் போராட்டத்தை அப்போது தலைமை தாங்கி முன்னெடுத்தவர் இன்றைய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்.

இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த அனுதாபமும் ஆதரவும் சிறையில் குடும்பத்தினரைப் பிரிந்து வாடும் 5 ஹிண்ட்ராப் போராளிகளின் மீது திசை திரும்பியிருந்த தருணம் அது.

இந்திய சமூகத்தின் பல தரப்புகளும் கோரிக்கை விடுத்தும், பிரதமர் அப்துல்லா படாவி ஹிண்ட்ராப் போராளிகளை விடுதலை செய்ய முன்வரவில்லை.

மலாய் ஆதரவு கிடைக்கும் என்ற நினைப்பில் ஹிண்ட்ராப் போராளிகளை விடுதலை செய்யாமல், இந்திய வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாமல் நாட்டின் 12-வது பொதுத் தேர்தல், 8 மார்ச் 2008-இல் நடைபெறும் என அறிவித்தார் அப்துல்லா படாவி.

பொன்.வேதமூர்த்தி

எப்படியும் தேர்தல் வியூகமாக பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஹிண்ட்ராப் போராளிகளை படாவி விடுதலை செய்வார் என்றே பெரும்பாலான அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ஆனால், படாவியோஹிண்ட்ராப் விவகாரத்தைக் கடுமையாகக் கையாண்டால், அதன் மூலம் மலாய் வாக்குகள் தனக்கு சாதகமாகத் திரும்பும் எனக் கருதி அதற்கேற்ப செயல்பட்டார்.

ஹிண்ட்ராப் போராட்ட உணர்வுகளை
சாதகமாக்கிக் கொண்ட அன்வார் இப்ராகிம்

இந்தியர்களின் மனக் குமுறலை, அதிருப்தியைச் சரியாகக் கணித்து இந்த அரசியல் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் அன்வார் இப்ராகிம்.

2004-இல் சிறையிலிருந்து விடுதலையான அவர் பக்கத்தான் ராயாட் என்ற பெயரில் கூட்டணி ஒன்றை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கியிருந்தார். அவரின் பிகேஆர் கட்சியோடு, ஜசெக, பாஸ் ஆகிய கட்சிகளும் அந்தக் கூட்டணியில் இணைந்திருந்தன. சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தாலும் சில சட்டங்கள் காரணமாக 2008 பொதுத் தேர்தலில் அன்வார் போட்டியிட இயலவில்லை. ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதியிலும் தேசிய முன்னணியை எதிர்த்து ஒரே ஒரு எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்துவது என்ற சாமர்த்தியமான அவரின் கட்டமைப்பை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டு போட்டியிட்டன.

பக்காத்தான் ராயாட் கூட்டணிக்குத் தலைமை தாங்கி நிகழ்த்திய பிரச்சாரங்களில் பின்வருமாறு அன்வார் முழங்கினார்:

“மார்ச் 8ஆஆம் தேதி (2008) நடைபெறும் பொதுத்தேர்தலில் நாங்கள் வென்று ஆட்சி அமைத்தவுடன் முதன் வேலையாக மார்ச் 9ஆம் தேதி போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹசானை என் முன்னால் அழைப்பேன். அவரிடம் நான் என்ன சொல்வேன் என்றால் ‘உங்களுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் தருகின்றேன். நீங்கள் தற்போது சிறையில் இருக்கும் 5 ஹிண்ட்ராப் தலைவர்கள் மீது போலீசார் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் காட்டுங்கள். உங்கள் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டி வழக்குப் போடுங்கள். அவர்கள் குற்றம் ஏதும் இழைத்திருந்தால் அவர்கள் இந்தியர்களா, சீனர்களா, மலாய்க்காரர்களா என்றெல்லாம் நான் பார்க்கமாட்டேன்.  அவர்கள் குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு  ஆதரவாகவும் இருக்கமாட்டேன். ஆனால், அப்படி போலீஸ் தலைவராக அவர்களைக் குற்றம் சாட்ட உங்களால் ஆதாரம் காட்ட முடியாதென்றால் உடனடியாக அன்றைக்கே, அப்போதே அந்த 5 பேரையும் நான் விடுதலை செய்வேன்.”

அன்வாரின் இந்த பேச்சு ஒன்றே இந்தியர்களைத் திருப்திப்படுத்தவும் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு அவர்களைத் தூண்டவும் போதுமானதாக இருந்தது.

12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, நாடே அதிர்ச்சியில் உறைந்தது. முதன் முறையாக தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது.

மஇகா போட்டியிட்ட 9 தொகுதிகளில் 2-இல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.சிகாமட்டில் டாக்டர் ச.சுப்பிரமணியமும் தாப்பாவில் எம்.சரவணனும் மட்டுமே வெற்றி பெற்றனர்.

சிலாங்கூர், பினாங்கு, கெடா, பேராக், கிளந்தான் ஆகிய 5 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் வசமாகின.

மனோகரன் மலையாளம்

ஹிண்ட்ராப் போராளியாக – உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதியாக – தைப்பிங் கமுந்திங் சிறையில் அடைபட்டிருந்த – வழக்கறிஞர் மனோகரன் மலையாளம், சிலாங்கூரில் கோத்தா ஆலாம் ஷா சட்டமன்றத் தொகுதியில் ஜ.செ.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

பேராசிரியர் பி.ராமசாமி

பினாங்கு மாநிலத்தை முதன் முறையாக ஜசெக கைப்பற்றியது. பேராசிரியர் ராமசாமி பினாங்கு, பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியிலும், பிறை சட்டமன்றத் தொகுதியிலும் ஜ. செ. க. சார்பாக போட்டியிட்டு வென்றார். பினாங்கு மாநிலத்தில் முதல் இந்திய துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பேராக்கில் சட்டமன்ற அவைத் தலைவராக முதன் முறையாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். தற்போது பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வ.சிவகுமார் அந்தப் பதவியை அலங்கரித்தார்.

வ.சிவகுமார்

இந்த அரசியல் மாற்றங்களுக்கான காரணம், இந்தியர்களின் சுமார் 90 விழுக்காட்டு வாக்குகள் ஒருமுகமாக தேசிய முன்னணிக்கு எதிராக விழுந்ததுதான்! ஒவ்வொரு தேசிய முன்னணி வேட்பாளருக்கும் எதிராக பக்காத்தான் ராயாட் கூட்டணியின் சார்பில் ஒரே ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டார் என்பதால் அந்த வாக்குகள் அனைத்தும் எளிதாக எதிர்க்கட்சிகளின் வசம் சென்று அவர்களின் வெற்றிக்கு வழி வகுத்தன.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஹிண்ட்ராப் போராட்டம்தான்! இந்தியர்கள் என்றால் பாரம்பரியமாக மஇகாவுக்கும் தேசிய முன்னணிக்கும் வாக்களிப்பார்கள் என்ற வழக்கத்தை முறியடித்ததும் ஹிண்ட்ராப் போராட்டம்தான்.

2018, 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு – குறிப்பாக இந்திய வாக்காளர்களின் மனமாற்றங்களுக்கு -வித்திட்டதும் ஹிண்ட்ராப் போராட்டம்தான் என்றால் அது மிகையாகாது.

இன்று பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக் கட்சிகளில் முக்கியப் பதவிகள் வகிக்கும் இந்தியர்கள் பலரும் அன்று ஹிண்ட்ராப் போராட்டத்தின் மூலம் அடையாளங் காணப்பட்டு வெளிச்சத்துக்கு வந்தவர்கள்தான்!

அந்த வரலாற்று பூர்வ ஹிண்ட்ராப் போராட்டத்தை நினைவுகூரும் இந்த நாளில் இந்திய சமூகத்திற்காக பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த – குடும்பங்களைப் பிரிந்திருந்த – நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கிய – காவல்துறையினரின் தடியடிகளைத் தாங்கிய – – தண்ணீர் பாய்ச்சலை எதிர்கொண்ட – கண்ணீர் புகைக் குண்டுகளின் எரிச்சலைத் தாங்கிய – ஹிண்ட்ராப் போராளிகளின் தியாகத்திற்கும் அர்ப்பண உணர்வுக்கும் நன்றி செலுத்துவோம்.

-இரா.முத்தரசன்