கோலாலம்பூர்: கடந்த ஆண்டு வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஏர் ஏசியா நிறுவன ஊழியர்களை, விமான வணிகங்கள் வழக்க நிலைக்குத் திரும்பியதும் மீண்டும் இணைத்துக் கொள்ள நிறுவனம் எண்ணம் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 2,000 ஊழியர்களின் சேவையை நிறுத்தியது வருத்தம் அளிப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் கூறினார். அவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்துவதாக உறுதிமொழி எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
“கொவிட் -19 காரணமாக 2,000 ஊழியர்களை இழந்த சோகம் எங்களுக்கு ஏற்பட்டது. நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு, அனைவரையும் நான் மீண்டும் வேலைக்கு அமர்த்துவதை உறுதி செய்ய வேண்டும். இது எனது குறிக்கோள். விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் போது நாங்கள் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று இன்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், ஏர் ஏசியா மற்றும் ஏர் ஏசியா எக்ஸ் தங்களது 24,000 பேர் கொண்ட பணியாளர்களில் 10 விழுக்காடு ஊழியர்களை பணிநீக்கம் செய்ததை உறுதிசெய்தது.