கோலாலம்பூர் – இந்திய அலைவரிசை வரலாற்றிலேயே முதல் முறையாக நடனப் போட்டியை ரியாலிட்டி ஷோவாக நடத்திய பெருமை அஸ்ட்ரோவைச் சாரும். தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வரும் இந்நிகழ்ச்சி, 2009-ஆம் ஆண்டில் ‘அவதாரம் ஆரம்பம்’ என குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக மாற்றி அமைக்கப்பட்டது. பிறகு, 2014-ஆம் ஆண்டு ‘யுத்த மேடை ஜூனியர்’-ஆக அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரம்மாண்ட மேடை, பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், திகைக்க வைக்கும் பரிசுப் பொருட்கள் என ஒவ்வொரு வருடமும் பிரமாதப்படுத்திவரும் இந்த நடனப் போட்டி இவ்வாண்டு 8 முதல் 11 வயது வரை உட்பட்ட 9 போட்டியாளர்கள் தனி நபராக பங்கெடுக்கவுள்ளார்கள்.
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அபினேஷ்வரி பால முருகன் (10), ஷாலு நாயர் பரமேஸ்வரன் (10), கீதாஞ்சலி லெட்சுமணன் (10), சர்வேஸ்வரன் வடிவேலு (8), டார்வினராஜ் (10), தேவிகா வேலு (8), ருத்திரேஸ்வரன்(11), சஞ்சய் முருகன் (9) மற்றும் பகாங் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் ராமகிருஷ்ணன் (10) இப்போட்டியில் களமிறங்குகிறார்கள்.
இது குறித்து அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “அஸ்ட்ரோ திறமை வாய்ந்த மலேசியர்களின் கலைத் திறன்களை மென்மேலும் வளர செய்ய அவர்களுக்குப் புதிய தளங்களை ஏற்படுத்தித் தருவதில் கடமைப்பட்டுள்ளோம். அவ்வகையில் குழந்தைகள் தங்களுடைய திறமைகளை வெளிபடுத்தவும் கலைத்துறையில் குறிப்பாக நடனத்தில் சிறந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளவும் ‘யுத்த மேடை ஜூனியர்’ நிகழ்ச்சி ஒரு மைல்கல்லாகத் திகழ்கின்றது” என்று தெரிவித்தார்.
இப்போட்டியின் நீதிபதிகளாகப் பிரபல நடன கலைஞர்களான ராகவ், விக்னேஷ்வரி வடிவழகன் மற்றும் நம் நாட்டின் நடன ஆசிரியரான ரதிமலர் கோவிந்தராஜு வலம் வரவிருக்கின்றனர். அஸ்ட்ரோவின் 360 பாகை நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் வேலரசன் மற்றும் புதுமுக அறிவிப்பாளர் நீதா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்கள்.
முதல் நிலை வெற்றியாளர், 10,000 ரிங்கிட் ரொக்கமும், 3500 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்புக் காத்து கொண்டிருக்கின்றது. இரண்டாம் நிலை வெற்றியாளர் 8,000 ரிங்கிட் ரொக்கமும், 3000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும், மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு 6,000 ரிங்கிட் ரொக்கமும் 2500 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் வழங்கப்படும்.
‘யுத்த மேடை ஜூனியர்’ போட்டியின் முதன்மை ஆதரவாளர் “ரஸ்னா” மற்றும் டி. எச்.ஆர் ராகா அதிகாரப்பூர்வ வானொலி நிலையமாகும்.
முத்தையா குழும நிறுவனங்களின் தலைவர், வாசுதேவன் முத்தையா கூறுகையில், “இவ்வாண்டு நடைபெறும் ‘யுத்த மேடை ஜூனியர்’ போட்டிக்கு “ரஸ்னா” முதன்மை ஆதரவாளராக இருப்பதற்குப் பெருமைக் கொள்கிறோம். அதை வேளையில் இப்போட்டியில் பங்கெடுக்கும் 9 போட்டியாளர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம். சிறந்த நடனத்தை வழங்கும் போட்டியாளர் இப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்”, என்று தெரிவித்தார்.
குழந்தைகளின் அட்டகாசமான நடனங்கள், அசத்தலான பரிசுகள், அதிர வைக்கும் தருணங்கள் என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த தயாராகிவிட்டது “யுத்த மேடை ஜூனியர்”.
கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி, சனிக்கிழமை தொடங்கிய இந்நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் அஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) ஒளிப்பரப்பாகவுள்ளது. ஜூனியர்களின் அற்புதமான நடன நிகழ்ச்சியைக் காணத்தவறாதீர்கள்.